பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

அறத்தின் குரல்

விட்டார். கண்ணனுக்கு பதில் கூறுவதற்காக வாய் திறந்த அசுவத்தாமன் பதிலைக் கூறாமல் மோதிரத்தை எடுப்பதற்காகக் கீழே குனிந்தான். தன் தந்திரங்களைத்தான் அன்றி வேறெவரும் அறிய முடியாத கண்ணன் தனக்குள் சிரித்துக் கொண்டான். கண்ணன் புன்னகை புரிவதையும் அசுவத்தாமன் கீழே குனிவதையும் துரியோதனனும் அவையினரும் பார்த்துக் கொண்டே இருந்தனர். அசுவத்தாமன் மோதிரத்தை எடுத்துக் கண்ணன் கையில் கொடுத்தான்.

“அசுவத்தாமா! மேலே சூரியனைப் பார்! சுற்றிக் கோட்டையிட்டிருக்கிறது” அசுவத்தாமன் உடனே அண்ணாந்து சூரியனைப் பார்த்தான். அவன் சூரியனைப் பார்த்த பின்பே கண்ணன் அவன் கையிலிருந்து மோதிரத்தை வாங்கிக் கொண்டான். இந்த நிகழ்ச்சியைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டார்கள்.

“இந்த அசுவத்தாமன் கண்ணன் காலடியில் குனிந்து வணங்கி அவன் கைமேல் அடித்துச் சூரியன் சாட்சியாக மேலே அண்ணாந்து பார்த்து ஏதோ சபதம் செய்கிறான். பாண்டவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும் அந்தச் சபதம்!” என்று எண்ணிக் கொண்டனர். அவர்கள் இப்படி எண்ணிக் கொள்ள வேண்டுமென்பதற்காகத் தானே கண்ணன் இந்த மாய நாடகத்தை நடித்தான். ஆனால், அசுவத்தாமன் பாவம்! அவனுக்கு இந்தச் சூழ்ச்சியெல்லாம் தெரியாது. எல்லாம் தற்செயலாக நடந்ததாகவே எண்ணியிருந்தான்.

“இனி அசுவத்தாமனை நாம் நம்பமுடியாது. அவனுக்குப் போரில் படைத்தலைமையும் கொடுக்க முடியாது. அவன் நமக்குத் துரோகம் செய்து பாண்டவர்களுக்கு ஆதரவாகக் கண்ணனிடம் ஏதோ வாக்குக் கொடுத்துவிட்டான்” என்று அப்போதே தன் அருகில் இருந்தவர்களிடம் கூறி விட்டான்