பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

83

அழிவதை என்னுடைய இந்தக் கண்களால் காண முடியாது! வாருங்கள் உடனே ஓடிவிடலாம்“ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக வீமனைக் கெஞ்சினாள் அவள்.

“நான் கோழையில்லை, பெண்ணே! இதோ உறங்கிக் கொண்டிருக்கும் என் சகோதரர்களையும் தாயையும் அனாதரவாக விட்டுவிட்டு உன்னோடு ஓடிவருவதற்கு என் அறிவு மங்கிப் போய்விடவில்லை. உன் தமையன் வரட்டுமே! அவன் கையால் நாங்கள் அழிகிறோமா அல்லது என் கையால் அவன் அழிகின்றானா என்பதை நீயே நேரில் காண்பாய்” - வீமன் ஆத்திரத்தோடு கூறினான்.

அவன் இவ்வாறு கூறி முடிக்கவில்லை. அந்தக் காடே அதிரும்படியாகக் கூக்குரலிட்டுக் கொண்டு தரை நடுங்க யாரோ அந்தப் பக்கமாக நடந்து வரும் ஒலி கேட்டது. வந்தது வேறெவருமில்லை! இடிம்பன்தான். அவனுடைய நெருப்புக் கங்கு போன்ற கண்களையும் யானைக் கொம்புகள் போன்ற பெரும் பற்களையும், மலை போன்ற உடலையும் வீமனைத் தவிர வேறு எவரும் பார்த்திருந்தால் நடுங்கி மூர்ச்சித்துப் போயிருப்பார்கள். ஆனால், வீமனோ தன்னைப் போருக்குச் சித்தம் செய்து கொண்டான். அளவற்ற துணிவுணர்ச்சி அவன் உள்ளத்திலும் உடலிலும் திரண்டு நின்றது. அங்கே வந்த இடிம்பனின் கண்களிலே முதலில் அவன் தங்கையே தென்பட்டாள். வீமனை நோக்கி நாணத்துடனே தலை குனிந்து தயங்கி நின்ற நிலையை அவன் விளக்கமாகப் புரிந்து கொண்டான். ஏற்கனவே சிவந்திருந்த அவன் விழிகள் இன்னும் சிவந்தன.

“இடிம்பி! பெண் புலி ஆண்மானின் மேல் பாய்வதை மறந்து காதல் கொள்ளத் தொடங்கிவிட்டதா? உன் நிலை எனக்குப் புரிகிறது. ஆனால், உன் காதலனை நான் உயிரோடு விட்டுவிடுவேன் என்று நினைக்காதே! இதோ பார். உன் காதலன் எனக்கு உணவு என்றாக்குகிறேன்” -என்று கூறிக்கொண்டே வீமனை நோக்கிப் பாய்ந்தான் இடிம்பன். அந்தப் பாய்ச்சலை எதிர்பார்த்து அதைச் சமாளிக்கத் தயாராயிருந்தான் வீமன். இருவருக்கும் போர் தொடங்கியது.