பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அறத்தின் குரல்

பாறை போன்ற தன் மார்பில் அவளைத் தழுவிக் கொள்ள முயன்றான் கதிரவன். குந்தி அஞ்சி நடுநடுங்கியவளாய் மனங்குலைந்து. “ஐயோ! நான் கன்னிப் பெண். என்னைத் தொடாதே! இது அறமா? முறையா?” - என்று அவன் பிடியிலிருந்து விலகித் திமிறி ஒதுங்கினாள். அவள் இவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கவும், கதிரவனுடைய கண்கள் மேலும் சிவந்தன. அவன் ஆத்திரத்தோடு, “அப்படியானால் என்னை ஏன் வீணாக அழைத்தாய்? என் கருத்துக்கு இசையாமல் என் வரவை இப்போது வீணாக்குவாயானால் உனக்கு இந்த வரத்தைக் கொடுத்த முனிவனுக்கு என்ன கதி நேரிடும் என்பதை நீ அறிவாயா? அல்லது உன் குலம் என்ன கதியடையும்? என்பதாவது உனக்குத் தெரியுமா? பெண்ணே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள் உன்னைப் பெற்ற தந்தை இதை அறிந்து உன் மேல் வெறுப்புக் கொள்வானே என்று நீ பயப்பட வேண்டாம். என் வரவு உனக்கு நன்மையையே நல்கும்! இதனால் என்னைக் காட்டிலும் தலைசிறந்த மைந்தன் ஒருவனை நீ அடைவாய்! இதை உன் தந்தை அறியாதபடி நான் மீண்டும் உனக்குக் கன்னிமையை அளித்துவிட்டுப் போவேன்” - என்றான். அவன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போதே குந்திக்கு நன்னிமித்தத்திற்கு அறிகுறியாக இடக்கண்கள் துடித்தன. அவள் கதிரவனை நோக்கிப் புன்முறுவலோடு தலையசைத்தாள். கதிரவன் மீண்டும் அவளை நெருங்கினான். வானத்திலிருந்த சந்திரனுக்கு இதைக் கண்டு வெட்கமாகப் போய்விட்டதோ என்னவோ? அவன் சட்டென்று தன் முகத்தை மேகத்திரளுக்குள் மறைத்துக் கொண்டான். மேகத்திலிருந்து, சந்திரன் மறுபடியும் விடுபட்டு வெளியே வந்த போது நிலா முற்றத்தில் கதிரவன் குந்தியிடம் விடைபெற்றுக் கொண்டி ருந்தான். தான் வந்தது, குந்தியை மகிழ்வித்தது, அவளுக்கு மீண்டும் கன்னியாக வரங்கொடுத்தது, எல்லாம் வெறுங் கனவோ, என்றெண்ணும் படி அவ்வளவு வேகமாக விடை பெற்றுக்கொண்டு சென்றான் அவன். சஞ்சலம், சஞ்சாரம், சாரத்யம், முதலியவைகளையே தன் குணமாகக் கொண்ட