பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

63


முறையும் பொருத்தமும் இல்லாத ஒன்றாயிற்றே?” - என்றார் அவர். கர்ணனைத் தன் உயிர் நண்பனாக எண்ணி வந்த துரியோதனன் கிருபாச்சாரியாரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு ஆத்திரமும் மனக் கொதிப்பும் கொண்டான். அவர் பேசிய விதம் பாண்டவர்களுக்கு ஆதரவளிப்பதைப் போல இருந்ததனால் அவனுக்கு முன்பே பாண்டவர்கள் மேல் இருந்த பகைமை உணர்ச்சியும் முதிர்ந்து எழுந்தது. இப்போது அவ்வளவு கோபமும் கிருபாச்சாரியார் மேலே திரும்பியது.

“கல்வியினால் பிறரைக் காட்டிலும் உயர்நிலை பெற்றவர்கள், அழகினால் கவர்ச்சி நிறைந்து விளங்குபவர்கள். பிறருக்குக் கொடுத்து மகிழும் கொடைப் பண்பு பூண்டவர்கள், இவைகள் போன்ற தகுதியுடையவர்களுக்குச் சராசரி உலகம் நிர்ணயிக்கும் சாதாரணமான பொருத்தங்களும் தகுதிகளும் அவசியமில்லை. பிறவியும் செல்வ நிலையும் கொண்டு மனிதர்களை இழிவு செய்து பேசுவது நேரியதாகாது. கிருபாச்சாரியார், அர்ச்சுனனோடு போர் செய்யும் தகுதி கர்ணனுக்கில்லை என்கின்றார்! என் உயிர் நண்பனாகிய கர்ணனுக்கு நானே அந்தத் தகுதியை உண்டாக்கிக் கொடுக்கிறேன். என் ஆட்சியைச் சேர்ந்த அங்க நாட்டிற்கு மன்னனாக இன்றே இப்போதே இந்த அவையிலேயே கர்ணனுக்கு முடி சூட்டுகின்றேன். பின்பு கர்ணன் அரசன் என்ற தகுதியை அடைந்து விடுவான்” - என்று துரியோதனன் கூறினான். கூறியபடியே கர்ணனை அப்போதே அவ்விடத்திலேயே அங்க நாட்டு வேந்தனாக முடிசூட்டிப் பிரகடனம் செய்தான். அரசவையில் கூடியிருந்த பெரியோர்களனைவரும் திடீரென்று துரியோதனன் கர்ணனுக்குச் செய்த இந்தச் சிறப்பைக் கண்டு திகைத்தனர். வியப்புக்குரிய முறையில் கர்ணனுக்கும் அவனுக்கும் இடையே அமைந்திருந்த நட்பின் அழுத்தம் அவர்களுக்கு விந்தையாகத் தோன்றியது.

‘முடியளித்து ஒருவனை அரசனாக்கி விடுவது என்பது எவ்வளவு பெரிய காரியம் ? அதை இவன் இவ்வளவு