பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

அறத்தின் குரல்

வேட்கையால் துடிதுடித்துக் கொண்டிருந்தார்கள். சரியாக இதே நேரத்தில் அவர்கள் சோர்ந்து விழுந்திருந்த இடத்திற்கு அருகில் எமனுடைய அருளால் ஒரு பெரிய நச்சுக்குளம் (உண்டவர்களை இறக்கச் செய்யும் நீரை உடையது) தோன்றியது. அதன் கரையில் அடர்ந்த பசுமையான மரக்கூட்டங்களும் தோன்றின. பாண்டவர்களைப் பூதத்தினிடமிருந்து காப்பாற்றுவதற்கு எமன் செய்த ஏற்பாடுகள் இவை.

நீர் வேட்கையைப் பொறுக்க முடியாத தருமன் சகாதேவனை நோக்கி, “தம்பீ! அருகிலே ஏதாவது குளமிருந்தால் சென்று நீயும் தண்ணீர் பருகிவிட்டு எங்களுக்கும் இலைத் தொன்னையில் தண்ணீர் கொண்டு வா!” என்று கூறினான். சகாதேவன் புறப்பட்டான். அங்கும் இங்கும் சுற்றிய பிறகு எமன் போலியாக உண்டாக்கிய நச்சுக்குளம் அவன் கண்களில் தென்பட்டது. வேகமாகச் சென்று. அதில் இறங்கி நீரைக் கைகள் கொண்ட மட்டும் அள்ளிப் பருகினான். பருகி விட்டு அருகிலிருந்த மரத்தில் தொன்னை செய்ய இலை பறிப்பதற்காக இரண்டடி நடந்தவன் அப்படியே வயிற்றைப் பிடித்தவாறே கரை மேலே சுருண்டு விழுந்தான். நீரிலிருந்த நஞ்சு தன் வேலையைச் செய்துவிட்டது. சகாதேவன் போய் வெகு நேரமாகியும் திரும்பாததைக் கண்டு ஐயுற்ற தருமன் நகுலனை அனுப்பினான். அவனும் இதே குளத்தில் வந்து நீரைப் பருகிவிட்டுச் சகாதேவனுக்கு அருகில் இறந்து வீழ்ந்தான். அடுத்து அர்ச்சுனன் வந்தான். அவனும் அறியாமல் நீரைப் பருகி மாண்டு விழுந்தான்.

நான்காம் முறையாக வீமன் வந்தான். கரையில் இறந்து விழுந்து கிடக்கும் தன் சகோதரர்கள் மூவரையும் கண்டவுடன் அவன் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. பொய்கை நீரில் ஏதோ தீமை இருக்கிறது என்று அனுமானித்துக் கொண்டான். எனினும் தண்ணீர்த் தாகத்தை அவனால் அடக்க முடியவில்லை. தனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் கூடத் தன்னை அடுத்து வருகின்ற தருமனுக்கு