பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

487

வசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல குதிரைப் படைகள் இருந்தன. அவன் விருப்பத்துக்குக் கேடு விளைவிக்காமல் அறிவுள்ள மனிதர்களைப் போலவே கட்டளைக்கு அடங்கிப் போரைச் செய்தன அந்தக் குதிரைகள். போர் மேலும் மேலும் வளர்ந்த போது நகுலனும் கர்ணனும் ஒருவருக்கொருவர் நேர் எதிரெதிரே நின்று போரைச் செய்தார்கள். கர்ணன் வயதானவன். அதோடு முரட்டுத்தனமாகப் போர் செய்வதற்குப் பழகியவன். நகுலனோ இளையவன். போர் அனுபவம் குறைந்தவன். எனவே நகுலன் கர்ணனைச் சமாளிக்க முடியாமல் அடிக்கடி தளர்ச்சி அடைந்தான். நகுலன் தளர்ந்தபோதெல்லாம் கர்ணன் கை ஓங்கியது. கர்ணன் நினைத்திருந்தால் நகுலனை ஒரேயொரு அம்பினால் கொன்று தீர்த்திருக்க முடியும். ஆனால் கர்ணன் அப்படிச் செய்யவில்லை. அதற்குக் காரணம் அவன் குந்தி தேவிக்குக் கொடுத்திருந்த வாக்குத்தான். ‘உன் மக்களில் அர்ச்சுனனைத் தவிர வேறெவரையும் கொல்ல முயல்வதில்லை’ என்று முன்பு குந்திக்கு வாக்குக் கொடுத்திருந்தான் அவன். நகுலனுடன் துணைக்கு வந்திருந்த விடதரன், மகதராசன் முதலியவர்களையெல்லாம் அஞ்சாமல் கொன்ற கர்ணன் நகுலனை மட்டும் அவ்வாறு செய்ய நினைக்கவும் இல்லை. நகுலன் விரைவில் கர்ணனுக்குத் தோற்றுவிட்டான். மேலும் இளைஞனாகிய நகுலனைத் துன்புறுத்த விரும்பாத கர்ணன் தன் படைகளையும் தேரையும் அர்ச்சுனன் இருந்த பக்கமாகத் திருப்பி அவனை எதிர்த்துப் போர் செய்யத் தொடங்கினான்.

தன் தம்பியாகிய நகுலனைத் தோல்வியுறச் செய்து விட்டு வருகிறான் கர்ணன் என்று தெரிந்ததும் அர்ச்சுனன் அவன் மேல் கோபமடைந்தான். சரிசமான வீரமுடைய அவர்கள் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகளில் இரண்டு கர்ணனுடைய மார்புக் கவசத்தைப் பிளந்து கொண்டு தைத்தது. அம்புகள் தைத்த வலி தாங்காமல் வேதனையுற்ற கர்ணன் கை சோர்ந்து பேசாமல் நின்று விட்டான். அவன் மார்பிலிருந்து இரத்தம் ஒழுகி வடிந்து