பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

அறத்தின் குரல்

தொடுத்தான். அந்த அஸ்திரம் பகதத்தன் மேல் பட்டதோ, இல்லையோ அவன் உடல் குபீரென்று தீப்பற்றி எரிந்தது. மறுகணம் அவன் நின்ற இடத்தில் திட்டுத் திட்டாகச் சாம்பல் குவிந்திருந்தது. சிறிது நேரத்தில் அவன் ஏறிப் போர் செய்த யானையும் கீழே விழுந்து மாண்டு போயிற்று. பாண்டவர்கள் படை வெற்றி முழக்கம் செய்தது. பகதத்தனின் மரணம் துரியோதனனுக்குப் பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டு பண்ணிற்று. சகுனியின் தலைமையில் காந்தார மன்னர்களையும் அவர்களைச் சேர்ந்த சைனியங்களையும் திரட்டி அர்ச்சுனனை எதிர்ப்பதற்கு அனுப்பினான் துரியோதனன். கடல் பொங்கி வருவது போலக் காந்தாரப் படை சகுனியைத் தலைவனாகக் கொண்டு அர்ச்சுனனை நோக்கித் திரண்டு ஓடி வந்தது. அர்ச்சுனனும் சும்மா விடவில்லை. அஞ்சாமல் வில்லை நாணேற்றி அம்புகளைத் தொடுத்தான். வந்ததும் வராததுமாக சகுனியின் புதல்வர்களாகிய விடசயன், சயன் என்ற இரு அரசகுமாரர்கள் அர்ச்சுனன் அம்புகளுக்கு இலக்காகி இறந்தனர். சகுனியோடு வந்த காந்தார நாட்டு மன்னர்கள் பலருக்கு எடுத்த எடுப்பில் இதுவே ஒரு பெரிய அபசகுனமாகப்பட்டது. போரில் கலந்து கொள்ளாமலே சகுனிக்குத் தெரியாமல் மெல்லக் களத்திலிருந்து நழுவிவிட்டார்கள் அவர்கள். சகுனியின் ஆத்திரம் தருமன் மேல் சென்றது. தன்னருகில் இருந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு தருமன் மேலே பாய்ந்தான். தருமன் அம்புகளால் சகுனியை வரவேற்றான். ‘சூழ்ச்சியே தோற்றுவிட்டது. இனிமேல் வெறும் மனிதர்கள் தோற்க எவ்வளவு நாழிகை ஆகும்?’ என்று எண்ணிக்கொண்டே போரிட்டான் தருமன்.

3. போரின் போக்கு

போர்க்களத்தை விட்டு ஓடினவர்கள் தவிர மீதமிருந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு சகுனி தருமனை நோக்கித் தாக்க