பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

311

மேலும் சிந்திப்போம். ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக இரு” என்று கண்ணன் வீமனைச் சமாதானப்படுத்தினான். வீமன் அமைதியடைந்து உட்கார்ந்தான். அருச்சுனன் கிளம்பிவிட்டான்.

“பொறுத்துப் பொறுத்துக் கண்டதெல்லாம் போதும். இனிப் போரைத் தவிர வேறு வழியில்லை. மானபங்கம் செய்தபோது, ‘கோவிந்தா! கோவிந்தா!’ -என்று உன்னை நோக்கித்தானே திரெளபதி கதறினாள். நீயே இப்படிப் பொறுமைனய உபதேசித்தால் என்ன செய்வது? துரியோதனன் சமாதான வழிக்கு இணங்க ஒரு காலும் சம்மதிக்கமாட்டான். பால் வார்த்தவர்களிடமே நஞ்சைக் கக்கும் பாம்பு போன்றவன் அவன்” -அருச்சுனன் முடித்ததும் நகுலன் முழங்கத் தொடங்கிவிட்டான்.

“ஊரறிய உலகறியப் பாண்டவர்கள் வீரர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் புகழ் மொழிகள் வீணாகப் போக வேண்டுமா? வணங்காமுடி மன்னனாகிய துரியோதனன் நமக்கு நாடு கொடுக்க இணங்க வேண்டுமானால் போரைத் தவிர வேறு வழியில்லை. நாம் பிச்சை கேட்கவில்லை. நமக்கு உரியதைக் கேட்கிறோம். தானாக அறியாத மூடன் துரியோதனன். பிறர் அறிவுறுத்துவதனாலா அவனுக்குப் புத்தி வந்து விடப் போகின்றது?”

நகுலனை அடுத்துப் பேசிய சகாதேவன், “எது எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும். எல்லாம் உங்கள் மாயை. உங்கள் அலகிலா விளையாடல்களை யார் அறிவார்? போர் தான் நடக்க வேண்டுமென்பது உங்கள் திரு உளமானால் அது நடந்து தானே தீரும்?” என்று கண்ணனை நோக்கிப் புன்னகையோடு கூறினான். சகாதேவன் கூடமாக மறைத்துப் பேசிய சாமர்த்தியப் பேச்சு கண்ணனைத் திடுக்கிடச் செய்தது. “நம்முடைய அவதார ரகசியத்தையே அல்லவா இந்தச் சின்னப் பயல் கூறிவிட்டான்!” -என்று மனத்தில் வியந்து கொண்டே சகாதேவனைத் தனியாக ஒரு புறம் அழைத்துக் கொண்டு சென்றான் கண்ணன்.