பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

அறத்தின் குரல்

தான் எப்படிப் போர் செய்தாலும் சுதாயு அவற்றை முற்றிலும் சமாளித்து விடுவதைக் கண்டு அர்ச்சுனன் கண்கலங்கினான். ஆத்திரமடைந்த அவன் மனம் சுதாவை எப்படியாவது தொலைத்துவிட வேண்டுமென்று துடிதுடித்தது. வில்லை வளைத்துச் கதாயுவின் நாணை அறுத்துவிட முயன்றான். பலமுறை முயன்ற பின் அர்ச்சுனன் தன் முயற்சியில் வெற்றி பெற்றான். சுதாயுவினுடைய வில் நாணறுந்து கீழே விழுந்தது. தன் வில்லை அர்ச்சுனன் ஒடித்து வீழ்த்தியதைக் கண்டு அளவற்ற கோபம் கொண்ட சுதாயு எவரையும் எப்போதும் கொல்லத் தவறாத வலிமை வாய்ந்த ஓர் கதாயுதத்தை அர்ச்சுனனுடைய மார்பைக் குறிவைத்து வீசினான். அவன் வைத்த குறி தவறாமல் அது மட்டும் அர்ச்சுனனுடைய மார்பில் பட்டிருக்குமானால் அவன் அப்போதே அங்கேயே இறந்து விழுந்திருப்பான். சுதாயுவின் கதாயுதம் தன்னால் அழிக்கப்பட முடியாத தெய்வீகத் தன்மை பொருந்திய யாராவது ஒருவர் மேற்பட்டால் அப்போது சுதாயுவே அழிந்து இறந்து போக நேரிடும். கண்ணன் நிலைமையைப் புரிந்து கொண்டான். அர்ச்சுனன் மார்பில் மோத வேண்டிய கதாயுதத்தை எதிர்பாராத விதமாகத் தன் மார்பிலேயே தாங்கிக் கொண்டான். கதை கண்ணனுடைய மார்பை அணுகிற்றோ இல்லையோ சுதாயு தன் தேரிலிருந்து கீழே விழுந்து நெருப்பிற்பட்ட புழுப்போலத் துடிதுடித்து இறந்தான். தன் ஆற்றலுக்கு மீறிய தெய்வீக சக்தி உடையவனை மோதும் போது அந்த ஆயுதத்தை ஏவியவனே இறக்க வேண்டுமென்பது அதன் நியதியாயிற்றே! ஆனால் அர்ச்சுனனுக்கு இந்தத் தந்திரம் எதுவுமே புரியவில்லை. “சுதாயு ஏவிய கதை ஏன் தன் மார்பிலே பாயவில்லை? திடீரென்று அவன் தேரிலிருந்து கீழே விழுந்து இறக்கக் காரணமென்ன?” -என்று திகைத்தான், தன் திகைப்பைத் தெளிவிக்குமாறு கண்ணனிடமே கேட்டான்.

“அர்ச்சுனா! உன் சந்தேகமும் திகைப்பும் நியாயமானவைதான். உனக்கு இவனைப் பற்றிய விவரங்களைச்