பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. யாத்திரை நேர்ந்தது

பாண்டவர்கள் எது நடக்கக் கூடாது என்று கருதினார்களோ அதுவே ஒரு நாள் நடந்து விட்டது. வேண்டுமென்று நடக்க வில்லை . சிறிதும் எதிர்பாராத நிலையில் தற்செயலாக நடந்து விட்டது. அர்ச்சுனன் அன்று காலை ராஜமாளிகையின் பிரதான வாயிலில் ஏதோ காரியமாக நின்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று யாரோ ஒருவர் பரிதாபகரமாக ஓலமிட்டுக் கொண்டே வாயிலுக்குள் நுழைந்து வரும் ஒலி கேட்டது. அர்ச்சுனன் திடுக்கிட்டுப் போய்த் தலை நிமிர்ந்து பார்த்தான். ஓர் அந்தணர் பதறியடித்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்தார். அவன் அவரை அங்கேயே தடுத்து நிறுத்தி “உம்முடைய குறை என்ன? எதற்காகத் துயரமுற்றவர் போல் காணப்படுகிறீர்?” என்று வினவினான்.

“அரசே! நான் என்ன வென்று கூறுவேன்? தருமமே உருவான தங்கள் தமையனார் ஆட்சியில் கூட இப்படி நடக்குமா? எனக்குச் சொந்தமான பசுக்களைக் காட்டு வேடர்கள் திருடிக் கொண்டு போய்விட்டனர். அவைகளை மீட்டுத் தருவதற்கு உதவி நாடி இங்கே வந்தேன்” -என்று பரபரப்புடனும் பதற்றத்துடனும் அந்த அந்தணர் மறுமொழி கூறினார். “அஞ்சாதீர்! இப்படியே நில்லும். நான் மீட்டுத் தருகிறேன் உம்முடைய பசுக்களை. இதோ, உள்ளே சென்று வில்லும் கணைப்புட்டிலும் எடுத்துக் கொண்டு வருகிறேன்” -என அவருக்கு மறுமொழி கூறி அங்கேயே நிறுத்திவிட்டு, தான் வில்லெடுத்து வருவதற்காக உள்ளே சென்றான் அருச்சுனன் . அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது! மாளிகைக்குள் நுழைந்து படைக்கலங்களாகிய வில், வேல், முதலியன வைக்கப் பெற்றிருக்கும்