பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

அறத்தின் குரல்

இடங்களிலும் தேடினான். பின்பு திரெளபதியை விசாரித்து அறிந்து கொண்டு அளகாபுரியில் வீமனுக்கு எவையேனும் தீமை நிகழ்ந்துவிடக் கூடாதே என்று அஞ்சி வீமன் மகன் கடோற்கசனையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றான்.

வெற்றிப் பெருமிதத்தோடும் மலர் கிடைத்த மகிழ்ச்சியோடும் ஓய்வு கொண்டிருந்த வீமன் தன்னைத் தேடி வந்த தமையனையும் மகனையும் அன்போடு வரவேற்றான். தருமன் தன்னிடம் கூறாமல் வந்ததற்காக வீமனைக் கடிந்து கொண்டான். கடோற்கசன் அன்போடு தந்தையைப் பணிந்து ஆசி பெற்றான். பின்பு மூன்று பேருமாகச் சேர்ந்து காடு திரும்பினார்கள். வீமன் மலரை அன்புடன் திரெளபதிக்குக் கொடுத்தான். நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் உரோமேசர் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

6. தீமையின் முடிவு

சகோதரர்கள் நால்வரும் திரெளபதியும் உரோமேசரும் வனத்தில் நலமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசித்து வந்த வனத்திற்கு அருகேயுள்ள வேறு சில வனங்களில் தவமுயற்சியில் ஈடுபட்டிருந்த முனிவர்கள் பலர் ஒருநாள் அவர்களைக் காண வந்தனர். தருமன் அந்த முனிவர்களை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றுப் பேணினான். முனிவர்கள் கூறினர்;

“தருமா! நீ அறத்தின் காவலன்! சத்தியத்துக்குத் துணைவன். உன்னிடம் நாங்கள் ஓர் உதவியை நாடி வந்திருக்கிறோம். மறுக்காமல் நீ அந்த உதவியைச் செய்வாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் வசிக்கும் வனப்பகுதிகளில், கரடி, வேங்கை, யானை, சிங்கம் முதலிய பயங்கர மிருகங்கள் அடிக்கடி தொல்லை விளைவித்து வருகின்றன. அவைகளை வேட்டையாடி எங்களைப் பாதுகாக்கும் உதவியை உன்னிடம் கோருகிறோம்"