பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அறத்தின் குரல்

நலத்தையும் விசாரித்தாய். அர்ச்சுனனைப் பற்றி மட்டும் ஏன் விசாரிக்கவில்லை? அவனை உனக்குப் பிடிக்காதா? இல்லை. அவன் மேல் உனக்கு அன்பில்லையா? என்ன காரணம்?” துறவியின் இந்தக் கேள்விக்கு மட்டும் சுபத்திரை விடை கூறவில்லை. அவளுடைய கன்னங்கள் நாணத்தால் சிவந்தன! கால் கட்டைவிரல் நிலத்தைக் கிளத்தது. உதடுகளில் நாணப் புன்னகை நெகிழத் தலைகுனிந்தாள் அவள்.

“சுவாமி! எங்கள் இளவரசி சுபத்திராதேவி அர்ச்சுனரை மணந்து கொள்ள வேண்டிய மணமுறை உரிமை கொண்டவள். ஆகையால் தான் வெட்கப்பட்டுக் கொண்டு அவரைப் பற்றி விசாரியாமலிருந்து விட்டாள்” - என்று அருகிலிருந்த தோழி விடை கூறினாள்.

“ஓகோ காரணம் அதுதானா” -என்று கூறிக்கொண்டே நிம்மதியாக மூச்சுவிட்டார் துறவி. “தவிரவும் அர்ச்சுனர் இப்போது தீர்த்தயாத்திரை போயிருப்பதாகக் கேள்விப் பட்டிருந்தோம் சுவாமி! தங்கள் ஞான திருஷ்டியால் அவர் இப்போது எங்கே தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருக் கிறார் என்று கூற முடியுமானால் கூறுங்களேன்” -தோழி மேலும் அவரைத் தூண்டினாள். கபட சந்நியாசி வேஷத்திலிருந்த அர்ச்சுனன் சிரித்துக் கொண்டே சன்னமாகக் குழைந்த குரலில் கூறலானான்.

“அம்மா? உங்கள் இளவரசியை மணந்து கொள்ளப் போகும் அந்த அர்ச்சுனர் இப்போது இதே இடத்தில் உட்கார்ந்து சந்நியாசியாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்குச் சொல்லுங்கள்” - இவ்வாறு கூறிக் கொண்டே தன் சொந்தத் தோற்றத்தோடு அவர்களுக்கு முன்னால் நின்றான் அவன். தோழிப் பெண் திடுக்கிட்டு விலகிச் சென்றாள். சுபத்திரை அதே நாணமும் பயபக்தியும் கொண்டு எழுந்து நின்றாள். ஆர்வமிகுதியோடு அருகில் நெருங்கி அவள் கரங்களைத் தன் கரங்களுடன் இணைத்துக் கொண்டு, “சுபத்திரை! நான் தான் விசயன். என்னைத் தெரிகின்றதோ?” -என்றான். சுபத்திரை இலேசாகச்