பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

அறத்தின் குரல்

அவனுடன் வந்திருந்த சிற்றரசர்கள், பரிவாரங்கள் தவிர வேறு சிலரும் புறப்பட்டனர். அவர்கள் தம்முடன் பாண்டவர்களிருக்கும் இடத்திற்கு வருவதனால் சில குழப்பங்கள் நேரிடலாம் என்று கருதிய அவன், அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டான். பாண்டவர்களைச் சந்தித்துத் தூது போன இடத்தில் நடந்தவற்றையெல்லாம் விபரமாகக் கூறினான் கண்ணன்.

‘இனிநாம் துரியோதனாதியர்களோடு போர் செய்து நம் உரிமையைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று நினைத்தனர் சகோதரர்கள் ஐவரும். தங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்திருந்த பேரரசர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் படைகளைக் கொடுத்துப் போரில் நேரடியாக உதவிபுரிய வேண்டுமென்று தூது அனுப்பி வேண்டிக் கொண்டார். போர் ஏற்படப் போகிறதென்று உறுதியாகத் தெரிந்து கொண்டபின் வாளா இருக்கலாமா? கண்ணபிரானின் ஆலோசனைப்படி வரவிருக்கும் பெரிய போருக்கு வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். போர்ச் செய்தியைத் தூதுவர்கள் மூலமும் திருமுகங்களின் மூலமும் அறிந்து கொண்ட அரசர்கள் தத்தம் படைகளோடு பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினர். நியாயத்தைக் கூறுகிற தருமநெறி போலவும் தருமத்தை விட்டு விலகாத மெய்மை போலவும் அரசர்கள் பலரின் படைப்புலம் பாண்டவர்கள் பக்கம் கிடைத்தது.

8. படை ஏற்பாடுகள்

காட்டாறுகள் பல பொங்கியெழுந்து கடலில் வந்து ஒன்று சேருவது போலப் பாண்டவர்கள் பக்கம் அரசர்களும் படைகளும் மேலும் மேலும் வந்து குவிந்தார்கள். திரெளபதியின் தந்தையாகிய துருபத மன்னன் தனக்கு அடங்கிய சிற்றரசர்களையெல்லாம்