பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

173

கூறினான். இதற்குள் துரியோதனனும் கர்ணனும் சகுனியைத் தங்கள் அருகில் அழைத்து அவன் காதோடு காதாக ஏதோ கூறினார்கள். சகுனி அவர்களுக்குத் தலையசைத்து விட்டுச் சிரித்துக் கொண்டே மீண்டும் தருமனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்தான். தருமன் சகுனியிருந்த பக்கமாகத் திரும்பவே இல்லை . துயரம், ஏமாற்றம், ஏக்கம், கழிவிரக்கம் ஆகிய எல்லாத் துன்ப உணர்ச்சிகளும் அவனுடைய முகபாவமாகத் திரண்டிருந்தன. எங்கோ சூனியத்தை நோக்கி இலக்கற்றுப் போய் இலயிப்பின்றி நிலைத்துக் கிடந்தது அவன் பார்வை.

“நான் சொல்கிறேனென்று கோபித்துக் கொள்ளக் கூடாது தருமா! உண்மையில் உன்னுடைய நன்மைக்காகத் தான் நான் இதை உனக்குச் சொல்கிறேன்”... தன் குரலில் தருமனுக்குப் பரிவோடு யோசனை கூறுகிற அக்கறை இருப்பது போலப் பாசாங்கு செய்தான் சகுனி. தருமன் மெல்லத் திரும்பிச் சகுனியின் முகத்தைப் பார்த்தான்.

“நீ இதுவரை என்னிடம் தோற்றுப் போய் இழந்த எல்லாப் பொருள்களையும் திருப்பிப் பெற வேண்டுமானால் என்னுடைய இந்த யோசனையை நீ புறக்கணிக்காமல் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.”

“என்ன யோசனை அது?. அதைத்தான் சொல்லேன்” -தருமன் ஆவலோடு கேட்டான்.

“ஒன்றும் பெரிய யோசனை இல்லை. சாதாரணமானது தான்!... உங்கள் மனைவி திரெளபதியைப் பந்தயமாக வைத்து இன்னும் ஒரே ஓர் ஆட்டம் ஆடினால், ஒவ்வொன்றாக இழந்த பொருள்களை மீண்டும் பெற்று விட முடியும்...”

அவையிலிருந்த அத்தனை பேருக்கும் தலையில் ஆயிரமாயிரம் மலைகளின் சிகரங்கள் தவிடுபொடியாகிப் பாறைகள் விழுந்து அமுக்குவது போலிருந்தது. செவிகளிலே நெருப்புக் கங்குகள் நுழைந்தாற் போல இந்தச் சொற்கள் புகுந்தன. வீமன் முதலிய நால்வருக்கும் சகுனியை அறைந்து கொன்றுவிடலாம். போலக் கைகள் துறுதுறுத்தன. “இந்த