பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

562

அறத்தின் குரல்

காலை பொழுது புலர்ந்தபோது காட்டில் தங்கியிருந்த பாண்டவர்களும் கண்ணனும் பாசறைக்குப் புறப்பட்டனர். இரவில் பாசறைக்குள் திருட்டுத்தனமாய்ப் புகுந்து அசுவத்தாமன் செய்த அட்டூழியங்களைப் பற்றி அப்போது அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

பாசறை வாயிலை அடைந்தபோது திரெளபதி அங்கே இறந்து கிடந்த முண்டங்களைக் கட்டி அழுது கொண்டிருந்தாள். அதைக் கண்டதும் பாண்டவர்கள் திடுக்கிட்டனர். அருகில் நெருங்கிப் பார்த்தபோதுதான் அந்த முண்டங்கள் தங்கள் ஐந்து பேருடைய புதல்வர்களின் இறந்த உடல்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உடனே பாண்டவர்கள் திரெளபதியோடு சேர்ந்து தாங்களும் கதறியழுதனர். பாசறைக்குள் நடந்திருக்கும் இந்தப் படுகொலைகள் எப்போது நடந்தன? கொலை செய்தது யார்? என்பதை அறியாமல் மயங்கினர்.

“கண்ணா! உன்னால் மோசம் போனோம். பாசறையைத் தனியே விட்டுவிட்டுக் காட்டில் வசிக்க வேண்டுமென்று நீ சொல்லியபடி கேட்டதனால்தானே இவ்வளவு வினைகளும் வந்தன.” என்று தருமன் கண்ணனை நோக்கிக் கதறினான்; அழுதான். கண்ணன் சாந்தம் நிறைந்த முகபாவத்தோடு மெல்லிய குரலில் பதில் கூறினான்: “தருமா நாம் காட்டில் தங்காவிட்டால் நம்மையும் இப்படிக் கொலை செய்திருப்பார்கள். நேற்று நள்ளிரவில் அசுவத்தாமன் இங்கு புகுந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்கிறான்! இவர்கள் தூங்கும் போதே இவர்களைக் கொலை செய்திருக்கிறான் அந்தப் பாவி,”

“ஓகோ! அந்த அசுவத்தாமன் இப்போது எங்கே இருக்கிறான்? முதல் வேலையாக அவன் தலையை அறுத்துக் கீழே தள்ளிப் பழிக்குப் பழி வாங்குகிறேன்” என்று வாளை உருவிக் கொண்டு ஆவேசமாகக் கிளம்பிவிட்டான் வீமன். அர்ச்சுனன் முதலியவர்களும் வாளை உருவிக்கொண்டு அசுவத்தாமனைத் தேடிச் செல்லத் தயாராகிவிட்டனர்.