பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

441

அர்ச்சுனன் அந்த அறிவுரையை ஏற்றுத் தெளிவு பெறவில்லை. மகனை இழந்த வேதனை பொறுக்க முடியாமல் தீயிலே பாய்ந்து தானும் உயிர் துறப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அவன். தீயும் வளர்த்தாகி விட்டது. யார் தடுத்தும் கேட்காமல் அர்ச்சுனனும் அதில் பாயத் தயாராகி விட்டான். இன்னும் சில விநாடிகள் தாமதித்தால் அர்ச்சுனனுடைய அழகிய சரீரம் தீயில் மறைந்துவிடும். அப்போது கண்ணன், முன்பு போலி வேதியனாக உருமாறி வந்து அர்ச்சுனனிடம் வாக்குப் பெற்றுக் கொண்டுபோன இந்திரனை நினைத்தான். நினைத்த அளவில் அர்ச்சுனனுக்கு முன் வந்து போலி வேதியன் நின்றான்.

“நில்! தீயை நெருங்காதே! சற்றுமுன் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா?” அருச்சுனன் இந்தக் குரவைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்; வேதியர் நின்று கொண்டிருந்தார். “தன் மகன் இறந்தால் அதற்காக வருந்தித் தான் தீயில் பாய்வதில்லை” -என்று சிறிது நேரத்திற்கு முன்பு அந்தப் பெரியவருக்கு வாக்களித்ததை அவன் நினைவு கூர்ந்தான். சட்டென்று தீயை விட்டு விலகிக் கொண்டு நின்றான். அந்தக் கிழட்டு வேதியனை இம்மாதிரியெல்லாம் தூண்டி விட்டு ஆட்டுவது கண்ணபிரானாகத்தான் இருக்க வேண்டும் என்று அர்ச்சுனன் அனுமானித்துக் கொண்டான். எனவே ஒன்றும் செய்யத் தோன்றாது பேசாமல் இருந்தான். “எல்லாம் நம்முடைய தவறு! ஒரு சிறுவனைத் தன்னந் தனியாகச் சக்கரவியூகத்திற்குள் அனுப்பியதுதான் நாம் செய்த தவறு. இனி வருத்தி என்ன பயன்?” என்றான் தருமரை நோக்கி, அர்ச்சுனனுடைய மனம் கொதித்தது. கைகள் பகைவர்களைப் பழி வாங்குவதற்குத் துடிதுடித்தன. அவன் அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோருமே கேட்கும்படியாக இரைந்த குரலில் ஆத்திரத்தோடு சபதம் கூறத் தொடங்கினான்:

“இன்றைய போரில் என் அருமை மகன் அபிமன்ன னைக் கொன்றவன் எவனோ அவனை நாளை மாலைக்குள்