பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

504

அறத்தின் குரல்

தேரின் பல பகுதிகளிலும் அம்புகள் சடசடவென்று மோதியதால் தேர்ச்சங்கரங்களும் அச்சுகளும் முறிந்தன. தேர்ச் சாரதியின் உடலில் அம்புகள் மார்பு வழியே முதுகில் ஊடுருவிப் பாய்ந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. கர்ணன் தர்மனைப் பழிக்குப் பழிவாங்க எண்ணுகிறவனைப் போல ஆக்ரோஷமாகப் போர் செய்து கொண்டிருந்தான். தருமனும் கர்ணனை எதிர்த்து அம்புகளைச் செலுத்திக் கொண்டுதான் இருந்தான். ஆனால் கர்ணன் கைகளே மேலோங்கியிருந்தன. ஏனோ தெரியவில்லை. தருமனுடைய மனத்தில் தளர்ச்சியும் பயமும் தோன்றிவிட்டன. அன்று தருமனுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை அதற்கு முன் என்று மேற்பட்டிராததாகும். சமயசஞ்சீவியைப் போல வீமன் தன் படைகளோடு அப்போது அங்கே வந்து சேர்ந்தான். வீமனைக் கண்டதும் தருமனை விட்டுவிட்டுக் கர்ணன் அவனோடு போர் செய்ய முன் வந்தான், கர்ணனுக்கும் வீமனுக்கும் போர் ஆரம்பித்து விடவே இடையிலிருந்த தருமனுக்கு ஓய்வு கொள்ள அவகாசம் கிடைத்தது. வீமனிடம் கர்ணனுடைய திறமைகள் பலிக்கவில்லை. வீமன் அவனை எதிர்த்துக் கடும் போர் செய்தான் மார்பில் ஆழமாகப் பாய்ந்த ஓர் அம்பு கர்ணனுக்குத் தாங்க முடியாத வேதனையைக் கொடுத்தது. அவன் அப்படியே தன் நினைவு இழந்து மூர்ச்சையாகித் தேர்த் தட்டில் வேரறுபட்ட அடிமரம் போற் சாய்ந்தான்.

அதைக் கண்ட சல்லியன் கர்ணனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு மூர்ச்சை தெளிவதற்கான சிகிச்சைகளைச் செய்யலானான்.

இதனால் சிறிது நேரத்தில் கர்ணனுக்கு மூர்ச்சை தெளிந்தது. பிரக்ஞை பெற்று எழுந்திருந்த கர்ணன் முன்னினும் அதிக ஆவேசத்தோடு போர் செய்யத் தொடங்கினான். அவனுடைய வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் பலருடைய உயிர்களைப் பறித்தன, சிங்கசேனன் என்ற மகாவீரன் உட்பட ஏழுபாஞ்சாலர்களைக் கொன்றான்