பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

அறத்தின் குரல்

மகனோடு எவ்வளவு நேரந்தான் போராட முடியும்? உதவுகின்ற நிலையில் ஒரு பெண் பக்கத்தில் இருந்தாள் என்பதென்னவோ உண்மை. ஆனால் அவளும் உதவ விரும்பாத இராக்ஷஸ மனத்தை ஏற்படுத்திக் கொண்டவளாக இருந்தால் என்ன செய்வது?

துச்சாதனன் கூந்தலைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான். திரெளபதி தன்னைத் தப்பித்துக் கொள்ளும் வழியறியாமல் அவன் இழுப்புக்கு உட்பட்டுச் சென்றாள். ‘தான் போகிற இடத்தில் தன் கணவன்மார்களும் இருப்பார்கள்’ என்ற நம்பிக்கை ஒன்றுதான் அவளுக்கு ஆறுதல் அளித்தது. வீதியோடு வீதியாக அவளை அவன் இழுத்துக் கொண்டு சென்றபோது கண்டவர்கள் மனம் இரங்கினர். இளகிய உள்ளம் கொண்டவர்கள் இந்த அநீதியைக் கண்டு பொறுக்க முடியாமல் மனம் உருகிக் கண்ணீர் சிந்தினர். சிலர் “காந்தாரி ஒருத்தி இருந்தும் தன் மகனால் தன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு இந்த அநீதி நடக்கும்படி விட்டுவிட்டாளே” என்று குறை கூறினர்.

“ஐயோ! இதென்ன அக்கிரமம்? இந்த நாட்டில் எல்லோரும் பெண்களோடு கூடப் பிறந்தவர்கள் தாமே? பெண்ணுக்கு இந்த வஞ்சனை நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே? காலம் எவ்வளவு கெட்டு விட்டது? இனிமேல் இவ்வூரில் குடியிற் பிறந்தவர்கள் கூடக் கண்ணியமான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது போலிருக்கிறதே!” பெண்கள் ஒருவருக்கொருவர் இவ்வாறு மனம் கொதித்துப் பேசிக் கொண்டனர்.

“வீமனும் அர்ச்சுனனும் இந்த வஞ்சகச் செயலுக்குச் சரியானபடி பழிவாங்காமல் விடமாட்டார்கள்” என்றெண்ணித் திருப்தியுற்றனர் சிலர். இன்னும் சிலர் ‘இதெல்லாம் தருமனால் வந்த வினை அல்லவா?’ என்று அவனைக் குறை கூறினார்கள். சிலருக்கு அப்படியே குறுக்கே பாய்ந்து துச்சாதனனைக் கழுத்தை நெரித்துக் கொன்று