பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அறத்தின் குரல்

இருக்கிறேன். இந்த வேத்திரகீய நகரை அடுத்திருக்கும் காட்டில் எவராலும் வெல்லமுடியாத ‘பகாசுரன்’ என்னும் அரக்கன் ஒருவன் இருக்கிறான். அவனால் இந்த ஊரும் இதில் வசிக்கும் மனித ஜீவன்களும் இதற்குள் என்றோ ஒரு நாள் அழிந்து போயிருக்க வேண்டியவை. ஆனால் அவ்வாறு அழிந்து போகாவண்ணம் இந்த ஊர் முன்னோர்கள் அந்த அரக்கனோடு ஓர் உடன்படிக்கை செய்து வைத்துக் கொண்டார்கள். அந்த உடன்படிக்கையினால் அரக்கன் ஊர் முழுவதையும் மொத்தமாக அழித்துக் கொல்ல இருந்த பயங்கரம் தவிர்க்கப்பட்டது. ஆனால் உடன்படிக்கையின் படி நாள்தோறும் இந்த ஊரில் ஒவ்வொரு வீட்டினராக முறை பகிர்ந்து கொண்டு அந்த அரக்கனுக்கு உணவாக ஒரு வண்டி சோறு கறிகளும் ஒரு முழுமையான மனிதனின் சரீரமும் கிடைக்கச் செய்ய வேண்டும். இன்று வரை இவ்வூரில் முறைப்படி இந்த ஏற்பாடு தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்த வீட்டின் முறை வண்டியோடு அனுப்ப என் ஒரே மகன்தான் பயன்பட வேண்டும். அவன் உயிர் தான் பலியாக வேண்டும். இந்தக் கொடுமையை எண்ணித் தான் நான் அழுகிறேனம்மா! வேறு ஒரு வழியும் இல்லை. ஒரே மகன் என்று பார்க்காமல் பெற்ற பிள்ளையை வண்டியோடு பகாசுரனிடம் அனுப்ப வேண்டியது தான்.”

“வேண்டாம்! உங்கள் ஒரே மகனை அனுப்ப வேண்டாம். நானாயிற்று அவனைக் காப்பாற்றுவதற்கு. எனக்கு ஐந்து புதல்வர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவனை வண்டியோடு அனுப்பி விடுகிறேன்” -என்றாள் குந்தி.

முதலில் பார்ப்பனி அதை மறுத்தாலும் பின்பு குந்தியின் வற்புறுத்தலின் மிகுதியால் அதனை ஒப்புக் கொண்டாள். வீமனைச் சோற்று வண்டியோடு அனுப்ப வேண்டுமென்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள் குந்தி. வீமன் எப்படியும் பகாசுரனை வென்று அவன் கொட்டத்தை அடக்கிவிட்டு வருவான் என்பது அவள் நம்பிக்கை. ஆனால்