பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

421

சாதியினரின் வழக்கம்?” என்று குத்திக் காட்டினான். துரோணருக்கு அந்த வார்த்தைகள் சுருக்கென்று இதயத்தில் தைத்தன. அப்போது அவருக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் கர்ணன் மேல் பாய்ந்து அப்படியே அவனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடலாம் போலத் தோன்றியது. மனத்தை அடக்கிக் கொண்டு தம்முடைய ஆத்திரத்தையெல்லாம் அவனுக்குப் பதில் சொல்வதில் காண்பித்தார் அவர்.

“கர்ணா! உன் வாயை மூடிக்கொள். உன்னுடைய பேச்சு உன் அறியாமையைத்தான் காட்டுகின்றது. என் சபதம் வெற்றி பெற முடியாமற் போனதற்கு நான் மட்டும் காரணமில்லை. நாம் எல்லோரும்தான் இன்று தோற்றோம். அவ்வளவு ஏன்? உன்னை மகாவீரன் என்று உனக்குள் எண்ணித் தலைகனத்துப் போயிருக்கும் நீ கூடத்தான் இன்றைய போரில் தருமனிடம் தோற்று முதுகு காட்டி ஓடி வந்தாய், தருமனிடம் சரீர பலத்தைவிட ஆத்மபலம் அதிகமாக இருக்கின்றது. அதனால்தான் நாம் ஒன்று கூடியும் அவனை வெல்ல முடியவில்லை. அர்ச்சுனன் வீமன் இவர்களும் கூட நம்மைப் போல வெறும் சரீரபலம் மட்டும் உள்ளவர்கள்தாம். அதனால் அவர்களையாவது அரிய முயற்சி செய்து வென்றுவிட முடியும். தருமனைத் தான் யாராலும் வெல்ல முடியாது. அவனுடைய வன்மை சத்தியத்தின் வன்மை, இணைகூற முடியாத பெருவன்மை, அதை வெல்ல வேர், மீறவோ, இந்த விநாடிவரை இவ்வுலகில் மனிதன் பிறக்கவில்லை. நான் இவ்வாறு கூறுவதில் உங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தாலும், அவநம்பிக்கை ஏற்பட்டாலும் அவர்கள் நாளைக்கே தருமனோடு போர் செய்வதற்கு முயலட்டும். கர்ணா! நீயும் வீரன் தானே! முடியுமானால் நான் நிறைவேற்ற முடியாத சபதத்தை நாளையே நீ நிறைவேற்றிவிடேன் பார்க்கலாம்.”

துரோணர் பேச்சைக் கேட்டுக் கர்ணன் வாயடைத்துப் போனான். அவனுக்குப் பதில் பேச நா எழவில்லை. துரோணர் யாரிடமும் விடைபெற்றுக் கொள்ளவில்லை. விறுவிறு