பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

127


அக்னிபகவான் திடுக்கிட்டார். ‘ஐயோ! இம்முறையும் அர்ச்சுனன் நம்மைக் காப்பாற்ற முடியாமல் போய் இந்திரன் வென்று விடுவானோ?’ என்று அவர் உள்ளம் அஞ்சியது. நல்ல வேளையாக அர்ச்சுனன் தன் சாமர்த்தியத்தினால் காண்டவ வனத்திற்கு மேல் அம்புகளாலேயே ஒரு கூடாரம் சமைத்து ஒரு துளி மழைநீர் கூட உள்ளே இறங்க முடியாதபடி தடுத்து விட்டான். மேகங்களுக்கும் அவற்றை அனுப்பிய இந்திரனுக்கும் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. அவனும் அவனோடு வந்த மற்ற தேவர்களும், எப்படியாவது தட்சகனைக் காப்பாற்றிவிட வேண்டும்’ -என்று முயன்றனர். தட்சகனுடைய மனைவி தன் புதல்வனாகிய அசுவசேனன் என்னும் பாம்புடனே அர்ச்சுனனின் அம்புக் கூடாரத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றது. அர்ச்சுனன் இதைக் கண்டு விட்டான். ஓர் அம்பைச் செலுத்தி அந்தப் பாம்பின் தலையை அறுத்து வீழ்த்தினான். ஆனாலும் அசுவசேனன் என்ற தட்சகனின் மகன் தப்பித்துச் சென்றுவிட்டான். இந்திரனிடம் போய்ச் சேர்ந்த அசுவசேனனை அவன் நன்குப் பாதுகாத்தான். பிற்காலத்தில் இந்தப் பாம்புதான் கர்ணன் கையில் நாகாஸ்திரமாகப் பயன்பட்டுத் தன் தாயைக் கொன்றதற்காக அர்ச்சுனனைப் பழி வாங்க முயல்கிறது.

“தட்சகன் அழிந்து போய்விட்டான். காண்டவத்தில் பற்றிய தீயும் நின்றபாடில்லை. இவ்வளவுக்கும் காரணம் இந்த அர்ச்சுனன் தான். இவனுக்குச் சரியானபடி புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்த இந்திரன் தன் படைகளுடனே, தன்னந்தனியனாய் நின்ற அர்ச்சுனனோடு கடும் போர் தொடுத்தான். அர்ச்சுனன் ஓரே ஆளாக இருந்தும் அஞ்சாமல் இந்திரனையும் அவனுடைய பெரும் படைகளையும் சமாளித்தான். இந்திரனும் நிறுத்தாமல் போரை வளர்த்துக் கொண்டே போனான். ‘தட்சகன்’ இறந்திருக்க வேண்டும் என்று தவறாக அனுமானம் செய்து கொண்டதே அதற்குக் காரணம். அப்போது வானிலிருந்து “இந்திரா ! தட்சகனும்