பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

449

இதோ இந்த விநாடியிலேயே எனக்கு வருகிற ஆத்திரத்தில் உங்கள் பாசறைகளையும் உங்களையுமாக அடித்து நொறுக்கி மண்ணோடு மண்ணாகக் கலந்து போகுமாறு செய்துவிடுவேன். கேவலம் உங்களைப் போன்றவர்களைக் கொல்வதற்காகவோ, எதிர்த்துப் போர் செய்வதற்காகவோ, அர்ச்சுனனும் வீமனும் முன் வர வேண்டியதில்லை. நான் ஒருவனே நினைத்தால் உங்களை துவம்சம் செய்துவிடுவேன். பொழுது விடிவதற்கு நீங்களும் உங்கள் பாசறைகளும் இருந்த இடம் சுடுகாடாக மாறிப் போகும். ஆனால் என் பெரியப்பனான தருமனுக்காக நான் பயப்படுகிறேன். இம்மாதிரி ஆவேசச் செயல்களை நான் செய்துவிட்டால் அது அவருடைய மனத்தை புண்படுத்துமே என்று தயங்குகிறேன். இதுவரை எந்த ஒரு காரியத்தையாவது நியாயத்துக்குப் பொருந்தும்படி செய்திருக்கிறீர்களா நீங்கள்? போரில் ஒருவனைக் கொல்ல வேண்டுமென்றால் அவனோடு எதிர் நின்று போர் செய்து கொல்வது தான் யுத்த தர்மம். ஆனால் அபிமன்னனை நீங்கள் அப்படிக் கொன்றீர்களா? பலர் சூழ்ந்து கொண்டு ஓர் இளைஞனைப் பின்புறமிருந்து கதாயுதத்தால் அடித்துக் கொல்வது போர் முறை ஆகுமா? நீங்கள் அபிமன்னனைக் கொல்வதற்காக மேற்கொண்ட சூழ்ச்சிகளை நினைத்தால் ஆண்பிள்ளைகள் வெட்கப்படுவார்கள். அவ்வளவு பெரிய பேடித்தனமான காரியத்தைச் செய்த நீங்கள் வீரம் பேசவோ, சபதம் செய்யவோ தகுதியற்றவர்கள்.” பேரிடிகள் முழங்கியது போலக் கடோற்கசன் பேசி நிறுத்தினான். ஒருகணம் அங்கு இருந்த யாவருக்குமே எதுவும் பதில் பேசத் தோன்றவில்லை. பேயறை பட்டவர்களைப் போல் திக்பிரமை பிடித்துப் போய் நின்றார்கள். முதல் முதலாகச் சமாளித்துக் கொண்டு பதில் பேசினவன் துரியோதனன்தான்.

“இந்தக் கடோற்கசன் ஒரு முரடன். அறிவும் நாகரிகமுமில்லாத அரக்கர்கள் குலத்தில் பிறந்தவன். இவனோடு பேசுவதனால் நமக்குத்தான் கேவலம் யாரும்

அ. கு. - 29