பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

107

பேரழகி. அவள். ஈரேழு - பதிநான்கு புவனங்களிலும் வடிவமோகனத்தில் அவளுக்கு நிகரான பெண்ணைத் தேடிக் காண முடியாது.

அத்தகைய அழகி சுந்தோபசுந்தர்கள் தவம் செய்து கொண்டிருந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் பெண்ணாக மட்டுமா வந்தாள்? இல்லை! இல்லை. அவர்களுடைய வைராக்கியத்தைச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பராக்கும் அகோர நெருப்பைப் போல வந்தாள். கண்டவர்களை வாரி விழுங்கும் அந்த அந்தகாரத்தின் அடியே தங்கள் தவத்தை, ஆழத்திற்கும் ஆழத்திலே அழித்துப் புதைக்க முற்பட்டு விட்டார்கள் சுந்தோபசுந்தர்கள். திலோத்தமை என்ற அந்த அழகியின் காரணமாகத் தங்களுக்குள்ளேயே ஒவ்வொருவர் சண்டையிடவும் தொடங்கிவிட்டனர். “அடே இவள் அருகில் நெருங்காதே! இந்த அழகி எனக்குத் தான்” என்றான் சுந்தன்.

“விலகி நில்! உன் அழகுக்கு இவள் ஒருத்திதான் குறை. இவளை அனுபவிக்கும் யோக்கியதை எனக்குத் தானடா இருக்கிறது” என்றான் உபசுந்தன். அவ்வளவு தான் இருவரும் கட்டிப் புரண்டார்கள், அவர்களுடைய தவமும் மண்ணில் விழுந்து புழுதியோடு புழுதியாகப் புரண்டது. இருவருடைய தவத்தையும் பாழாக்கிவிட்ட பெருமையில் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள் திலோத்தம்மை! -இந்த நிகழ்ச்சியைக் கூறி நிறுத்திவிட்டுச் சிறிது நேரம் மெளனமாக இருந்தார் நாரதர். அப்படி இருந்தபோது அவர் விழிகள் பாண்டவர்களை ஊடுருவின. பாண்டவர்கள் ஒன்றும் புரியாமல் திகைப்புடன் மலங்க மலங்க விழித்தனர். அப்போது நாரதர் தொடர்ந்து மேலும் கூறத் தொடங்கினார்:

“பாண்டவர்களே! இந்தப் பழைய நிகழ்ச்சியை இப்போது எதற்காக நினைவூட்டினேன் என்று உங்களுக்குச் சந்தேகமாக இருக்கலாம். ஆனால் நான் உங்கள் நலனுக்காகத் தான் இதை நினைவூட்டினேன். திரெளபதியை நீங்கள்