பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

அறத்தின் குரல்

செய்தான். வீமனுடைய தாக்குதலைத் தாங்க முடியாத துரியோதனாதியர்கள் களத்திலிருந்து பின் வாங்கி ஓடலாயினர். அவர்களுக்கு உதவுவதற்காக வந்த சல்லியன் வீமனை எதிர்த்தான். சல்லியனுடைய எதிர்ப்புச் சற்றே கடினமாகத்தான் இருந்தது. வீமன் சல்லியனைச் சமாளிக்க முயன்று கொண்டிருந்த போது, நகுலனும் வீமனுக்கு உதவியாக வந்து சேர்ந்து கொண்டான். வீமனும் நகுலனுமாக இருவர் சேர்ந்து தாக்கவே சல்லியன் நிலை திண்டாட்டமாகி விட்டது. தேரும், குதிரையும், கொடியும் வில்லும், அம்பும் எல்லாம் இழந்து போர்க்களத்தை விட்டு ஓடினான் சல்லியன்.

வீட்டுமன் போர் செய்வதை நிறுத்திய பின்பே தான் வில்லைத் தொட முடியும் என்று சபதம் செய்திருந்த கர்ணன் இன்று பதினோராவது நாள் போரில் வில்லெடுத்துப் போர் செய்வதற்கு முன் வந்திருந்தான். கர்ணனுக்கும் விராட ராசனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. விராட மன்னனும் கர்ணனும் ஒருவர் மேல் ஒருவர் எய்து கொண்ட அம்புகளால் வான் வெளியே மூடப்பெற்று மறைந்துவிடும் போலத் தோன்றியது. பதினோராவது நாம் களம் முழுவதும் ஓய்வு நேரமே இல்லாமல் ஒருவரை ஒருவர் விடாது எதிர்த்துப் போர் செய்தவர்கள் துருபதனும் பகதத்தனும் ஆவர். இவர்கள் பரஸ்பரம் யானைப்படைகளைக் கொண்டு போரிட்டனர். துரியோதனாதியர் படையை சேர்ந்த அரசர்களுள் சோமதத்தன் என்பவனும் ஒருவன். அவன் கீழே பல சிற்றரசர்கள் அடங்கியிருந்தனர். அவன் தன் குழுவினரோடு சிகண்டியை எதிர்த்துப் போர்ச் செய்தான். சிகண்டி வாட்போர் செய்தானானால் அவனை எதிர்த்து நிற்க யாராலும் ஆகாது. சிகண்டியை எதிர்த்து வாட்போர் செய்த சோமதத்தன் முதலியவர்கள் மிக விரைவிலேயே தோற்று. ஓடிப் போக நேர்ந்தது. 'இலக்கண குமாரன்’ என்னும் பெயரோடு துரியோதனனுக்கு ஒரு மகன் இருந்தான். அவனும் இந்தப் போருக்கு வந்திருந்தான். அர்ச்சுனன் புதல்வனும் தீரனுமாகிய அபிமன்னனை எதிர்த்து இலக்கண குமாரன்