பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

53

 வேகமாக அழிந்து விடுகின்றன. அதற்கு மாறாகச் சூழ்ச்சி செய்யும் மனிதர்கள், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஆகிய யாவும் விரைவாக முன்னேறி வெற்றியை நெருங்குவது போலத் தோன்றுவது இயற்கைதான். ஆனால் முடிவில் அழிவும் தோல்வியும் இவர்களுக்கே ஏற்படப் போவது உறுதி. உலக வாழ்வின் மிக நுணுக்கமாக உண்மை இது. இந்த உண்மையை முடிவில் விளக்குவது தான் காவியப் பயன்.

6. துரோணர் வரலாறு

கெளரவர்களும் பாண்டவர்களும் படைக் கலப் பயிற்சி பெறுவதற்குரிய இளமைப் பருவத்தை அடைந்தனர். வீட்டுமன், விதுரன் இருவரும் அரசிளங்குமாரர்களாகிய இருசாரார்க்கும் ஏற்ற ஆசிரியரைக் கொண்டு போர், படைப்பயிற்சி முதலிய வித்தைகளைக் கற்பிக்கக் கருதினர். ‘கிருபாச்சாரியார்’ என்ற சிறந்த ஆசிரியர் குருவாகக் கிடைத்தார். பாண்டவர்களும், துரியோதனாதியர்களும் இவரிடத்தில் வில், வேல், வாள் முதலிய படைக்கலப் பயிற்சிகளைப் பெறுமாறு வீட்டுமனால் ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதர்களும் ஏற்பாட்டின்படி கிருபாச்சாரியார் பால் பயிற்சி பெற்றனர். கிருபாச்சாரியார் ஆசிரியராக இருந்தும், வேறொர் சிறந்த ஆசிரியரையும் தேடினர் வீட்டுமன் முதலியோர், துரோணர் இரண்டாவதாக அகப்பட்டார். துரோண மரபில் தோன்றிய துரோணர் பரத்துவாச முனிவரின் புதல்வர், எல்லாக் கலைகளிலும் தேர்ந்தவர். வில்வித்தையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திறமை துரோணருக்கு உண்டு.

அத்தினாபுரியிலிருந்து ஆசிரியரைத் தேடிச் சென்ற தூதுவர்கள் துரோணரை அழைத்து வந்ததனால், யாவருக்கும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது அது. திருதராட்டிரனது அவை துரோணருக்கு மரியாதை செய்து, அவரை அன்போடு வரவேற்றது. துரோணர் அந்த