பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

அறத்தின் குரல்

காக்கிறானே. இவள் வணங்கத் தக்க தூய்மையுடையவள்” என்று கூறிப் பாராட்டினர். கதாயுதத்தைப் பற்றியிருந்த வீமனின் கரங்கள் ஆயுதத்தின் தண்டை முன்னிலும் அதிக ஆத்திரத்தோடு இறுக்கிப் பிடித்தன. குகையிலிருந்து புறப்படுகின்ற ஆண் சிங்கம் போலத் தன் இடத்திலிருந்து எழுந்தான் அவன். “திமிர் பிடித்த கெளரவர்களே! கேளுங்கள். எங்கள் தமையனுடைய சாந்த குணத்துக்குக் கட்டுப் பட்டுத்தான் இது வரை வாளாவிருந்தோம். உங்களுக்கு அஞ்சி நாங்கள் கட்டுண்டு கிடப்பதாக நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஆண்மையுள்ள மனிதர்களாகவோ, வீரர்களாகவோ நான் எண்ணவேயில்லை. நீங்கள் பேடிகள், பெண்களின் முந்தானையோடு மட்டும் போராடத் தெரிந்தவர்கள்! எங்கே பார்க்கலாம்? உங்களுக்கும் ஆண்மை இருக்குமானால் இப்போது என் ஒருவனோடு நூறு பேரும் போருக்கு வாருங்கள் பார்க்கலாம்.” வீமனுடைய முழக்கம் அவையையே கிடுகிடுக்கச் செய்தது.

9. பாஞ்சாலி சபதம்

ஏமாற்றமடைந்த துரியோதனன் முன்னைக் காட்டிலும் பல மடங்கு சினமும் ஆத்திரமும் கொண்டிருந்தான். வீமன் பேசிய பேச்சு வேறு அவனை மனங்குன்றிப் போகச் செய்திருந்தது. ஒரே சமயத்தில் இரட்டைத் தோல்விகளை அடைந்துவிட்டது போல் அவன் மனம் புழுங்கினான். இது திரெளபதியை எப்படியாவது மீண்டும் வேறு இன வகையில் மானபங்கம் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தை உறுத்தியது.

“துச்சாதனா! இந்த வீமனுடைய ஆண்மையைப் பின்பு பார்க்கலாம். இப்போது திரெளபதியைத் தூக்கி வந்து இந்த அவையிலுள்ள பலரும் காணும்படியாக என் தொடையில் அமரச் செய்! பார்க்கலாம், இவர்கள் வீரத்தையும், அவள், கற்பையும்."