பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

317


“நான் அப்படியே செய்தாலும் அதில் தவறு என்ன? நீ செய்வதைத் தானே நானும் செய்கிறேன். நான் பாண்டவர்களின் தூதனாக வந்திருக்கிறேன். உன் வீட்டில் விருந்துண்டு விட்டு உனக்கு மாறாகப் பாண்டவர்களை ஆதரித்துப் பேச வேண்டியிருக்கலாம். எனவேதான் நான் உன்பால் தங்க விரும்பவில்லை. உண்ட வீட்டுக்குத் துரோகம் செய்பவர்கள், பெரியோர் அறிவுரைகளை மீறியவர்கள், நன்றி மறந்தவர்கள், இவர்கள் பழி சூரியனும் சந்திரனும் உள்ள அளவு நீங்காது...”

“அதெல்லாம் இருக்கட்டும்! நீ வந்த காரியமென்ன? அதை முதலில் நான் தெரிந்து கொள்ள வேண்டும்.”

“வேறு ஒன்றுமில்லை! எல்லாம் உனக்குத் தெரிந்த காரியம்தான். பாண்டவர்களின் வனவாசம் முடிந்து விட்டது. மிகுந்த துன்பமுற்று நாளைக் கழித்து விட்டு வந்திருக்கி றார்கள். அவர்களுக்குச் சேர வேண்டிய நாட்டைத் திருப்பிக் கொடுப்பது தான் ஒழுங்கு.”

“அது நடக்காது ! சூதாடித் தோற்றுப் போன நாட்டை மீண்டும் பெறுவது முடியுமா? யார் என்னைப் பழித்தாலும் சரி, நான் பாண்டவர்களுக்கு நாட்டைக் கொடுக்க மாட்டேன். எப்படிப்பட்ட பெரும்போர் இதனால் ஏற்படுவதாயிருந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இழந்தவை இழந்தவையே! இனிக் கிடைக்கப் போவதில்லை !”

“போனால் போகிறது. முழு நாட்டையும் கொடுக்க முடியாவிட்டாலும் அவர்களுக்குச் சேர வேண்டியதில் சரி பாதியாவது கொடு போதும்.”

“கொடுப்பதென்ற பேச்சே நம்மிடத்தில் கிடையாது. பாண்டவர்களின் ஆசை பயனில்லாதது.”

“துரியோதனா! பாண்டவர்களின் பகை பொல்லாதது! ஐந்து பேருக்கும் ஐந்து ஊர்களையாவது ஆளக் கொடு. அவர்கள் அதைக் கொண்டாவது திருப்தியடையட்டும்."