பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

494

அறத்தின் குரல்

கவலைப்படாதீர்கள்” என்று தருமனுக்குப் பதில் கூறிவிட்டுக் கண்ணன் துட்டத்துய்ம்மன் பக்கம் திரும்பினான்.

“துட்டத்துய்ம்மா! இதுவரை தருமனும் நானுமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்து விட்டோம். நீயும் மற்றவர்களும் கூட அதைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டீர்கள். போருக்கு நேரமாகிவிட்டது. அதோ எதிரிகளைப் பார்! அவர்கள் தயாராகிவிட்டார்கள். நீயும் படைகளை அணிவகுத்து நிறுத்து” துட்டத்துய்ம்மன் உடனே படைகளை அணிவகுத்து வரிசை வரிசையாக நிறுத்தினான். தருமன் முதலியவர்களும் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டனர். எதிர்த் தரப்பில் கர்ணன் சல்லியனைத் தன்னுடைய தேர்ப்பாகனாக அமர்த்திக் கொண்டான். அர்ச்சுனனுக்குச் சூழ்ச்சியும் வல்லமையும் மிகுந்த கண்ணன் தேரோட்டியாக அமைந்திருப்பதனால் தனக்கும் அத்தகைய தேர்ப்பாகன் ஒருவன் வேண்டுமென்று துரியோதனனிடம் அனுமதி பெற்றே சல்லியனைத் தேர்ந்தெடுத்து நியமித்துக் கொண்டிருந்தான்.

“உனக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தால்தான் உன்னிடம் நான் பெற்றிருக்கும் உதவிகளுக்கு நன்றி செலுத்திய திருப்தி எனக்கு ஏற்படும். துரியோதனா! நீ துணிவு கொள். அஞ்சாதே! இந்த கர்ணன் உயிருடன் இருப்பதற்குள் சகல சாம்ராஜ்யங்களையும் வென்று உன் காலடியில் குவிக்கப் போகிறான். அப்படிச் செய்யாவிட்டால் அவனுடைய செஞ்சோற்றுக்கடன் எப்படிக் கழிவது?” - என்று கர்ணன் பெருமையாக வீர மொழிகளைப் பேசிக் கொண்டான்.

2. அந்திம காலத்துப் போர்

கர்ணனின் வேண்டுகோள்படியே சல்லியனை அழைத்துத் துரியோதனன் அவனுக்குத் தேரோட்டியாக அமர்த்திக் கொடுத்தான், சல்லியனும் கர்ணனுக்குத்