பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

61


நெகிழ்ந்து அன்பு சுரக்கும் சொற்களால் அவனுக்கு நன்றி கூறினார். தமது நன்றிக்கு அறிகுறியாக ஆற்றலும் வேலைப்பாடும் செறிந்த அம்பு ஒன்றை அவனுக்கு அவர் அளித்தார்: துரோணரிடம் பெருமதிப்புக் கொண்டுள்ள அன்பர்களும், நகரத்துப் பெரியோர்களும், அரண்மனையைச் சேர்ந்தவர்களும் அர்ச்சுனன் அவரைக் காப்பாற்றியதைக் கேள்விப்பட்டு அவனைப் புகழ்ந்தனர்.

ஓர் நல்ல மங்கல நாளில் கௌரவர்களும் பாண்டவர் களும் பிறரும் கற்ற கலைகளை அரங்கேற்றம் செய்ய முடிவு கொண்டார் துரோணர். விழாப்போல நிகழ வேண்டிய இந்த அரங்கேற்ற நிகழ்ச்சி நகரத்தார் எல்லோருக்கும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அரசவையைச் சேர்ந்தவர்களும், நகரமாந்தரும் கூடியிருந்த ஓர் அரங்கில் விழாத் தொடங்கியது. வழிபடு தெய்வத்தை வணங்கியபின் மாணவர்கள் தாம் கற்ற கலைகளைக் காட்டுமாறு பணித்தார் துரோணர், மாணவர்களும் அவையிலிருந்த சான்றோர்களை வணங்கி அரங்கேற்றத்தில் ஈடுபட்டனர். துரியோதனனும் வீமனும் அரங்கேறிய போது இருவருக்கும் இடையே உள்ள மனப்பகை புலப்படுமாறு போர் செய்து கொண்டனர். நடுவே இவர்கள் போரிடுவது சுவைக்குறைவான நிகழ்ச்சியாகத் தென்பட்டதனால் துரோணரின் புதல்வனான அசுவத்தாமன் புகுந்து அமைதியை உண்டாக்க வேண்டியதாயிற்று. கடைசியாகத் துரோணரை வணங்கி விசயன் தான் கற்ற கலைகளைச் செய்து காட்டி அவையில் கூடியிருந்தவர்களை மகிழ்விக்கத் தொடங்கினான். அவனுடைய அபாரமான திறமைகளையும் நுணுக்கங்களையும் கண்டு போற்றினர் அவையோர். துரோணர் அவனுக்குக் கற்பித்த போது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்போது பெரிதும் மகிழ்ச்சி கொண்டார். ஆனால் ஒரே ஓர் உள்ளம் மட்டும் இவ்வளவையும் கண்டு குமுறிக் குமைந்து வெதும்பிப் பொறாமையால் தவித்துக் கொண்டிருந்தது. அதுவே கர்ணனுடைய உள்ளம். விசயன் மேல் அசூயை அவனுக்கு.