பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

65

 வேண்டுகோளைத் தங்கள் உயிரை ஈந்தாவது நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்களித்தனர். துரோணர் உள்ளம் குளிர்ந்தார். தங்களுக்குப் பாண்டவர்களைக் காட்டிலும் குருபக்தி அதிகம் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்பிய வர்களைப் போல் கௌரவர்கள் உடனே நால்வகைப் படைகளையும் திரட்டிக் கொண்டு பாஞ்சாவநாட்டை நோக்கி வேகமாகப் புறப்பட்டு விட்டார்கள். பாண்டவர்கள் ஆர அமர நின்று நிதானித்துப் படைகளுடன் புறப்பட்டனர். அர்ச்சுனன், வீமன் முதலியோரிடம் நிகரற்ற வீரப்பண்பு சிறந்திருந்ததைப் போலவே எதையும் சிந்தித்துப் பார்த்து நன்மை தீமை ஆராயும் பண்பும் நிறைந்திருந்தது. ஆனால் துரியோதனாதியர்களிடமோ இந்த இரண்டு விதமான பண்புகளுமே இல்லை. ஆத்திரப்படுகின்றவர்களுக்கு அறிவு குறைவு என்று சொல்லுவார்கள். அறிவுக் குறைவினால் வெற்றி எங்காவது விளையுமா? வேகமாகப் படைகளோடு யாகசேனனை எதிர்த்து வந்த துரியோதனாதியர் கதியும் இந்தப் பழமொழியின் கருத்தையே நிரூபணம் செய்தது. பேரரசனான யாகசேனன் கெளரவர்களது படையெடுப்பை முன்கூட்டியே அறிந்து கொண்டு தன் படைகளைச் சரியான படி எதிர்முனையில் அணிவகுத்து நிறுத்தியிருந்தான். துரியோதனாதியரும் படைகளும் களத்தில் நுழையவும் யாகசேனனும் அவன் படைகளும் அவர்கள் மேல் பாயவும் சரியாக இருந்தது. யாகசேனனின் மின்னல் வேக எதிர்ப்பினாலும் தாக்குதலினாலும் சிதறிப்போன கெளரவர்களும் பின்வாங்கிப் புறமுதுகிட்டு ஓட வேண்டியதாக நேர்ந்து விட்டது.

நல்லவேளையாகக் கெளரவர்கள் பின்வாங்கித் தோல்வியை நெருங்கிக் கொண்டிருந்த இந்த நேரத்தில் அர்ச்சுனன் தன் படைகளோடு களத்துக்குள் புகுந்தான். யாகசேனனின் படைகளுக்கும் அர்ச்சுனனின் படைகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. துரியோதனாதியரைத் தாக்கி ஓடச் செய்தது போல் அர்ச்சுனனையோ அவனது படை

அ. கு. - 5