பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அறத்தின் குரல்

வியாசருடைய அருளால் நூறு புதல்வர்களைப் பெறுவதற்கு ஏற்றவாறு கருக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அப்போது கேள்விப்பட்டிருந்ததும் இந்த ஏக்கத்தை மேலும் வளர்ப்பதற்குக் காரணமாயிற்று. குந்தியை அழைத்துக் காந்தாரி கருவுற்றிருக்கும் செய்தியையும் தன் ஏக்கத்தையும் கூறுத் தொடங்கினான் பாண்டு.

“ஆருயிர்க் காதலி! இந்த உலகில் அறிவறிந்த மக்களைப் பெறுவதும், அங்ஙனம் பெற்ற மக்களின் மழலை மொழிகளைக் கேட்பதும் போலச் சிறந்த இன்பம் வேறு எவற்றிலுமே இல்லை. ஆனால் என் தீவினையால் நானடைந்திருக்கின்ற சாபத்தை நினைத்துப் பார்த்தால் இந்தப் பிறவியில் மக்களைப் பெற்று மழலை கேட்கும் இன்பத்தை நான் அடையாமலே இறந்து விடுவேனோ? - என்று எனக்குத் தோன்றுகிறது. மக்கள் இன்பத்தை நான் அடைவதற்கு உன்னால் ஏதேனும் உதவி செய்ய இயலுமா குந்தி?” உள்ளம் உருகும் சொற்களால் குந்தியிடம் வேண்டிக் கொண்டான் பாண்டு. கணவனின் இந்த உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட போது தனக்குத் துர்வாசர் கற்பித்துச் சென்ற மந்திரத்தின் நினைவு ஏற்பட்டது குந்திக்கு. தான் சூரியனைச் சேர்ந்தது, கர்ணனைப் பெற்று ஆற்றிலே விட்டது, ஆகிய இரண்டு செய்திகளை மட்டும் கூறாமல், துருவாசருக்குப் பணிவிடை செய்தது தொடங்கி அவரிடம் வரம் பெற்றது வரை எல்லாச் செய்திகளையும் பாண்டுவிடம் விவரமாகக் கூறிவிட்டாள் அவள். குந்தி கூறியதைக் கேட்ட பாண்டு இழந்த பொருளை இரு மடங்காகத் திரும்பப் பெற்றார் போல மனமுவந்து, “இதற்கு நான் மனப்பூர்வமாகச் சம்மதிக்கின்றேன் குந்தி, நீ விரும்புகின்ற தேவர்களை அழைத்து அவர்களுடன் கூடி எனக்கு மக்கட் செல்வத்தைக் கொடு! அது ஒன்றே எனக்கு வேண்டியது!” என்றான்.

குந்தி கணவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கித் தர்மராசனை மந்திரம் ஒலித்து அழைத்தாள். முன்பு முதன் முறை கதிரவன் தோன்றியது போல் இப்போது தருமன்