பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

57

வித்தை கற்க வேண்டும்’ என்று அவரையே தனது இலட்சிய குருவாக எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் மனத்தையுடையவன். துரோணரைக் காணாமலும் கண்டு பழகாமலுமே அவரை மனத்தின் உயர்ந்த இடத்திலே வைத்துத் தெய்வமாகப் போற்றி வணங்கும் இயல்பினன். கல்விக்குரிய பருவமும் ஆர்வமும் முறுகி வளர்ந்து பெருகியபோது அவன் துரோணரை நாடிச் சென்றான். அவரிடம் தன் ஆர்வத்தைக் கூறிப் பணிவுடனே தனக்கு வில்வித்தை கற்பிக்குமாறு வேண்டினான். ஆனால் துரோணர் தம்மால் இயலாதென்று மறுத்து விட்டார். ஏகலைவன் பெரிதும் ஏமாற்றமடைந்து மனம் வருந்தினான். இறுதியில் எவ்வாறேனும் துரோணரிடமே கற்க வேண்டும் என்ற முடிவு தான் அவன் மனத்தில் நிலைத்து நின்றது. வனத்தில் ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு அதில் துரோணரைப் போன்ற உருவச்சிலை ஒன்றைச் செய்து வைத்தான். அந்த சிலையையே தன் குருவாகப் பாவித்து அதற்கு முன்னால் நின்று விற்பயிற்சி பெறும் முயற்சியில் தானாகவே ஈடுபட்டான் அவன். உறுதியான நல்லெண்ணங்களும் முயற்சிகளும் ஒரு போதுமே வீண் போவதில்லை. நல்ல பயனளித்தது. நாட்கள் செல்லச் செல்லத் துரோணரிடம் நேரிற் கற்றால் எவ்வாறு பயன் அடைந்திருப்பானோ அவ்வளவு பயனை ஏகலைவன் அடைந்து விட்டான். வில்வித்தையில் சிறந்த வீரன் என்று பெயரும் புகழும் பரவலாயின.

ஏகலைவன் விற்கலையில் இவ்வாறு அடைந்த புகழ் துரோணர் செவிகளுக்கும் எட்டியது. துரோணர் ஏகலைவனைக் கண்டு செல்ல வேண்டும் என்று வனத்திற்கு வந்தார். கோவிலில் விளங்கும் வழிபாட்டுக்குரிய தெய்வச்சிலையைப் போலத் தம்முடைய உருவச்சிலை அங்கே ஏகலைவனின் ஆசிரமத்தில் இடம் பெற்றிருப்பதை அவர் கண்டார். மனம் பூரித்தார். துரோணரே தம் ஆசிரமத்தை நாடி வந்திருப்பதை உணர்ந்த ஏகலைவன்