பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அறத்தின் குரல்

எண்ணிக் காதலுணர்வு பெற்றுத் துறவியாக உருக்கொண்டு வந்திருக்கும் அவனிடமே, ‘அருச்சுனர் நலமா?’ - என்று கேட்கும் பேதமை நிறைந்த சுபத்திரையின் காதலிலும் ஒரு வகை அழகு இருக்கத்தான் இருக்கிறது. பாண்டியன் மகளாகப் பிறந்து பார்த்தனை மணந்து இன்புற்ற நிலையிலும் அவனைப் பிரிந்து துன்புறுகின்ற நிலையிலும் ஆகிய இரண்டு மாறுபட்ட நிலைகளிலுமே சித்திராங்கதையின் பற்றும் மெய்ம்மையும் பிறழாத காதலில் மனோ திட்டத்தின் கனிந்த நிலையைக் காண்பதற்கு முடிகின்றது. அரக்கியாகப் பிறந்து அரக்கனுக்குத் தங்கையாக வாழ்ந்தும் அண்ணனாகிய அரக்கனைக் கொன்ற பீமன் மேல் அன்புள்ளத்தோடு காதல் கொள்ளும் இடும்பியினுடைய குணப்போக்கு ஒரு தனி விந்தை. வன்மையும், கொடுமையும் உள்ள அன்பற்ற அரக்கி ஒருத்தி மென்மையும் காதலும் கொண்டு அன்பு செலுத்துபவளாக மாறும் விசித்திர நிலையை இடிம்பி இக்காவியத்தில் நமக்கு அளிக்கிறாள். பாரதக் கதையின் பரப்பை நோக்கினால் சாதாரணமான ஒரு சிறிய பாத்திரமே இடும்பி. ஆனாலும் தன்னுடைய சிறந்த குணசித்திரத் தோற்றத்தினால் மறக்க முடியாத ஓர் இடத்தை இக்காவியத்தில் அவள் பெற்றிருக்கின்றாள். ஆடவர், பெண்டிர் என்று இருவகையிலும் பாரதம் என்னும் காப்பியக் கடலிற் பயிலும் பாத்திர முத்துக்கள் எண்ணிலடங்காதவை. எண்ணிலடங்காத அந்த முத்துகளில் எல்லாவற்றையும் குளித்தெடுத்துக் கொணர்ந்து காட்டுவதற்குரிய வாய்ப்பும் விரிவும் இந்தச் சிறிய முன்னுரைக்குப் போதாது. மேலே தொடர்ந்து விவரிக்கப்படவிருக்கும் கதையின் விரைவான வசனப் போக்கிற்கு ஒரு முன் விளக்கமாக அமைந்தால் போதும் என்ற நோக்கத்தோடுதான், இந்தச் சிறு முன்னுரையும் கூட இங்கே எழுதப்பட்டது. பொன்னை, பொருளை, உணவை, உடையை, அனுபவிக்கப் பிறந்தவர் களைக் காட்டிலும் காவியத்தைச் சுவைக்கும் அனுபவத்திற்கு உரியவர்களாகப் பிறந்தவர்களே பெரும் பாக்கியசாலிகள்.