பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

499

சிரித்து இகழும் படியாக இவர்கள் வாட்போர் வளர்ந்தது. தூரத்திலிருந்த துரியோதனன் இந்த விபரீத நிகழ்ச்சியைப் பார்த்து விட்டான். அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் ஓடோடி வந்து கர்ணனுக்கும் சல்லியனுக்கும் நடுவே நுழைந்து வாள்களின் சுழற்சியை நிறுத்தினான்.

“கர்ணா! சல்லியா! ஒன்றும் தெரியாத சிறு பிள்ளைகளைப் போல நீங்கள் இப்படிக் கேவலமாக நடந்து கொள்ளலாமா? உங்களுடைய இந்த உட்பகையைப் பகைவர்களுக்கு முன்னால் எல்லோரும் காணும் படியாக வெளிப்படுத்தலாமா? முதலில் சொந்தப் பகைகளை மறந்து விட்டுக் கடமைகளைச் செய்யுங்கள்.” என்று பலவாறு சமாதான வார்த்தைகளைக் கூறி இருவரையும் போர் நீங்கி மீண்டும் ஒன்றுபடச் செய்தான்.

கர்ணனும் சல்லியனும் அப்போதைக்குத் தங்கள் பகைமையை மறைத்துக் கொண்டு கடமையில் முனைந்தனர். அவர்கள் மனத்திலுள்ள பகையுணர்ச்சியை அறவே மாற்றி விட வேண்டுமென்று கருதிய துரியோதனன் மேலும் சில அறிவுரைகளை அவர்களுக்குக் கூறினான்.

“மகா மாயவனாகிய கண்ணனுடைய கருத்துக்கு இணங்கி விதுரன் என் கண்முன்பே வில்லை ஒடித்தெறிந்துவிட்டுத் தீர்த்த யாத்திரை போய் விட்டான். முதலில் எனக்குப் படையுதவி செய்வதாக வாக்களித்த பலராமனும் கடைசியில் மனம் மாறி விதுரனோடு சேர்ந்து கொண்டு தீர்த்த யாத்திரைக்குச் சென்றுவிட்டான். பாட்டனாராகிய வீட்டுமர் அதியற்புதமான முறையில் போர் செய்துவிட்டு மரணப்படுக்கையை அடைந்துள்ளார். விற்கலையில் வல்லவராகிய துரோணர் போரிலே வீர சொர்க்கம் அடைந்து விட்டார். முருகப்பெருமான் அரக்கர்களை அழித்துத் தேவர்களைக் காத்தருளினான். அதுபோல் நீங்களும் என்னைக் காக்க வேண்டும். கர்ணா! சல்லியன் மேல் இருக்கும் விரோதத்தை இந்தக் கணத்தோடு உன் மனத்திலிருந்து