பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அறத்தின் குரல்


“நான் ஆண் சிங்கம்! நீ வெறும் பூனை. ஒரே ஒரு நொடியில் உன்னை வானுலகுக்கு அனுப்பி வைக்கிறேன். அங்கே தேவமாதர்கள் உன்னைக் காவல் புரிவர். அரக்கனை எதிர்க்கிற துணிவும் உனக்கு உண்டா? இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்!” -என்று தன் இடிக்குரலில் முழங்கிக் கொண்டே பாய்ந்து பாய்ந்து போர் செய்தான் இடிம்பன். இந்தக் கலவரமும் ஒலியும் பாண்டவர்களை எழுப்பிவிட்டது. குந்தியும் எழுந்து விட்டாள். சகோதரர்களும் குந்தியும் வியப்புடன் ஒரு புறம் நின்று போர்க் காட்சியைக் கண்டனர். இடிம்பியும் மற்றோர் புறம் நின்று கண்டாள். இடும்பனைப் போல் வாய் முழக்கம் செய்யாமல் போரில் தன் சாமர்த்தியத்தைக் காட்டி அவனைத் திணறச் செய்து கொண்டிருந்தான் வீமன். இடிம்பன் தன்னுடைய மதிப்பீட்டிற்கும் அதிகமான பலத்தை வீமனிடம் கண்டதனால் மலைத்தான். ஒரு புறம் தன் தமையன் தருகிறானே என்ற பாசமும் மறுபுறம் தன் உள்ளங்கவர்ந்தவன் நன்றாகப் போர் புரிகின்றானே என்ற ஆர்வமும் மாறி மாறி எழுந்தன, இடிம்பியின் மனத்திலே. வீமனிடத்தில் அவளுக்கு ஏற்பட்ட காதல் சகோதர பாசத்தையும் மீறி வளருவதாக இருந்தது. வீமன் தன் கைவன்மை முழுதும் காட்டிப் போர் புரிந்தான். மலைச்சிகரங்களிடையே கொத்து கொத்தாகப் பூத்திருக்கும் செங்காந்தள் பூக்களைப் போல இடிம்பனின் பருத்த மார்பிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கிளம்பியது. இடிம்பன் பயங்கரமாக அந்தக் காடு முழுவதும் எதிரொலிக்கும் படியாய் அலறிக் கொண்டே வேரற்ற மரம்போலக் கீழே சாய்ந்தான்.

வீமன் நிமிர்ந்து நின்றான். தன் புதல்வன் பெற்ற இந்த அரிய வெற்றி, குந்தியை மனமகிழச் செய்தது. சகோதரர்களும் பாராட்டி மகிழ்ந்தனர். இடிம்பி தன் தமையனின் உடலைக் கட்டிப் புரண்டு கதறியழுது கொண்டிருந்தாள். ஆயிரமிருந்தாலும் உடன் பிறப்பல்லவா? அவன் மார்பில் பீறிட்டு வழியும் அதே குருதி தானே அவள் உடலிலேயும் ஓடுகின்றது? ஆனால் அவள் அடிமனத்தின் ஆழத்தைத் தொட்டுப்