பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

அறத்தின் குரல்

வீரர்களையோ சுலபமாக அவர்களால் பின் வாங்குமாறு செய்வதற்கு முடியவில்லை. அதற்கு நேர்மாறாக யாகசேனனையும் அவனுடைய படைவீரர்களையும் அர்ச்சுனன் தன் வில் வலிமையாலும் போர்த்திறமையினாலும் தளர்ந்து பின் வாங்கும்படி செய்திருந்தான். நொடிக்கு நொடி அர்ச்சுனன் கை ஓங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு யாகசேனனே பயந்து கலக்கமடையும் நிலையாகிவிட்டது. அர்ச்சுனனின். வில்லுக்கும் விற்பிடித்த கைகளுக்கும் ‘வெறி’ பிடித்து விட்டது. அன்றைக்கு அம்புமழை பொழிந்தது அவன் வில். ஆண்மை மழை பொழிந்தது அவன் நெஞ்சம். வெகு நேரம் போர் நிகழ்ந்தது. முடிவில் பாஞ்சால நாட்டு மன்னன் யாகசேனன் அர்ச்சுனனுக்கு முன் ஆயுதங்களின்றித் தலைகுனிந்து வெறுங்கையனாகி நிற்கவேண்டிய நிலை வந்து விட்டது. படைகளில் பெரும் பகுதி அழிக்கப்பட்டன, விசயனின் கணைகளால் சிறு பகுதி அஞ்சி ஓடிவிட்டன. எஞ்சி நின்றவன் யாகசேனன் ஒருவனே . வயதிலும் அனுபவம், ஆற்றல் முதலியவற்றிலும் அர்ச்சுனனைக் காட்டிலும் மூத்தவனான யாகசேனன் அர்ச்சுனனுக்கு முன்னால் கைதியைப் போல் நின்றான்.

துரோணரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக வெறுங்கையனாய் நின்ற யாக்சேனனைச் சிறைப்பிடித்துத் தன் தேர்க்காலில் இழுத்துக் கட்டினான் அர்ச்சுனன், யார் யாரையோ வென்று வாகை சூடிப் பேரரசனாக விளங்கும் தன்னைக் கேவலம் ஓர் இளைஞன் போர்க்களத்தில் சிறைப்பிடித்துத் தேர்க்காலில் கட்டியது யாதசேனனுக்கு மலைப்பைக் கொடுத்தது. இது அவனுக்கு விந்தையும் புதுமையும் நிறைந்த அனுபவம். வாழ்விலேயே அழிக்க முடியாதபடி அவனுக்குக் கிடைத்த தோல்விக் கறை இது ஒன்றுதான். அர்ச்சுனன்தான் ஆசிரியருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகச் சிறைப் பிடித்த யாகசேனனை அவருக்கு முன் கொண்டு சென்றான். துரோணர் பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து பார்த்தார்.