பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

அறத்தின் குரல்

தோன்றும்படிச் செய்திருந்ததனால் மத்திரபதி மன்னன் ஏமாந்துவிட்டான். வரவை முன்பே அறிந்து தருமன் தான் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக எண்ணிக் கொண்டு துரியோதனன் விரித்து வைத்திருந்த சூழ்ச்சி வலையில் விழுந்து விட்டான். சோறும் நீரும் கொடுத்து உபசரித்தவர்கள் தருமனுடைய ஆட்கள் எண்றெண்ணிக் கொண்டு, “என்னுடைய இந்தப் பெரிய படைகளும், நானும் உங்களுக்குத் துணையாகவே வந்திருக்கிறோம். இது சத்தியம்” என்று அவர்களுக்கு உறுதி மொழி கூறிவிட்டான் மத்திரபதி.

இறுதியில் துரியோதனனே அவனுக்கு முன் தோன்றி “மத்திரபதி மன்னா! நீ என்னுடைய உபசாரத்தை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் எனக்கு உதவுவதாகச் சத்தியமும் செய்து விட்டாய்! இனிமேல் பாண்டவர்களை நினைப்பதில் பயனில்லை. மறந்துவிடும். என் பக்கம் போரில் உதவு” என்று கூறிய போதுதான் தனது அறியாமைக்கு வருந்தி வாடினான் மத்திரபதி மன்னன். சத்தியத்தை எப்படி மீறுவது? பாண்டவர்க்குப் படைத் துணையாக வந்தவன் விதிவசத்தால் கெளரவர்களுக்குத் துணையாக நேர்ந்தது. துரியோதனன் அரசாட்சியிலும் அவனுடைய கொள்கைகளிலும் நம்பிக்கையுள்ள வேறு பல அரசர்களும் அவன் பக்கம் படைத்துணையாக வந்தார்கள். ஏற்கனவே அவன் வசமிருந்த துரோணர் அசுவத்தாமன் முதலியவர்களின் படைகளையும் சேர்த்தால் பதினொரு அக்குரோணிப் (படைகளின் வகுப்பைக் குறிக்கும் ஒரு பிரிவு) படைகள் ஆயின. வந்தவர்களும் இருந்தவர்களுமாகிய படை வீரர்களுக்குப் பாசறைகள், போர்க் கருவிகள் முதலிய தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டன. வயது முதிர்ந்தவனும் பல பெரிய போர்களில் அனுபவம் கொண்டவனுமாகிய வீட்டுமன் கௌரவர்களின் படைத்தலைவனாக இருக்க வேண்டும் என்பதை யாவரும் வரவேற்றனர். அவர்கள் வேண்டுகோளை மறுக்க முடியாத காரணத்தாலும் துரியோதனனிடம் உண்டு வளர்ந்த நன்றிக்கடனைக் கழிக்க வேண்டும் என்பதற்