பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

அறத்தின் குரல்

என்றும், எப்போதும் நாங்கள் தயாராக இல்லை” என்று மறுமொழி கூறினர்.

“போரில் வெற்றியா, தோல்வியா என்பதைப் பின்பு பார்க்கலாம். நீங்கள் கூறுகின்ற இந்த உறுதிமொழி இப்போதே வெற்றியை அடைந்து விட்டாற்போன்ற பெருமிதத்தை எனக்கு உண்டாக்குகின்றது. உங்களுக்கு என் நன்றி...” என்று தருமன் கூறினான். பின்பு எல்லோருமாகக் கூடிப் படைகளைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர். வலிமையும் ஆற்றலும் படைகளை நன்கு ஆளும் திறமையும் உடைய சிவேதன் தலைவனானான். சிவேதன் தலைவனாக வாய்த்ததில் எல்லோருக்கும் பெரு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி வெறியில் அரவான் எழுந்து ஒரு சபதம் செய்தான். “துரியோதனாதியர்கள் படையில் பெரும் பகுதியை அழிப்பதற்கு நான் ஒருவனே போதும். போரை எதிர்நோக்கித் துடித்துக் கொண்டிருக்கின்றன என் தோள்கள்.” அரவானுடைய சபதத்தால் ஆவேசமுற்ற யாவரும் மகிழ்ச்சியோடு அதைக் கைகொட்டி வரவேற்றனர்.

இங்கே பாண்டவர்கள் பக்கம் படை ஏற்பாடுகள் இவ்வாறு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது துரியோதனாதியர்கள் சும்மா இருப்பார்களா? அங்கே அவர்களும் படை ஏற்பாடுகளை விரைவாகச் செய்து கொண்டுதான் இருந்தனர். கண்ணன் தூதாக வந்து குழப்பம் செய்து விட்டுப் போனவுடனே போர் நெருங்கி விட்டது என்று துரியோதனனுடைய உள் மனம் அவனுக்கு எச்சரித்துவிட்டது. ‘இனியும் படை வலிமையையும் துணைவலிமையையும் பெருக்காமல் இருப்பதில் அர்த்தமில்லை’ என்று எண்ணிய அவன் உடனே தனக்குப் பழக்கமுள்ள அரசர்களுக்கெல்லாம் படை உதவி கோரித் திருமுகங்கள் போக்கினான். ஆனால் தான் அனுப்பிய எல்லாத் திருமுகங்களிலும் அவன் ஒரு பெரிய தவறைச் செய்தான். மன்னாதி மன்னர்களாக இருந்தாலும் சரி