பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அறத்தின் குரல்

அறிய அறியப் பொறாமையால் கொதித்தது கெளரவர் மனம். பாண்டவர்கள் மேல் படையெடுத்துச் சென்று அவர்களை மூலமற்றுப்போகும்படி அழித்து விட்டால் என்ன? என்று தோன்றியது துரியோதனன் முதலியோர்க்கு. இறுதியில் இந்தக் குரோதம் நிறைந்த எண்ணமே அவர்கள் உள்ளத்தில் வலுப்பெற்று வளர்ந்து விட்டது. படைகளைத் திரட்டிக் கொண்டனர். கொதிக்கும் உள்ளமும் குமுறும் அசூயையுமாகப் படைகளோடு மீண்டும் பாஞ்சால நகரத்துக்குப் புறப்பட்டனர்.

ஆனால் இவர்கள் இவ்வாறு வருவார்கள் என்பதை உறுதியாக எதிர்பார்த்திருந்த துருபதன் புதல்வன் துட்டத்துய்ம்மன், பாஞ்சால நாட்டுப் படைகளோடு எதிர்ப்பதற்குத் தயாராக இருந்தான். பாண்டவர்கள் ஐவரும் கூடத் துட்டத்துய்ம்மனோடு போருக்குத் துணிந்து ‘வீர வேள்வியாக’ அதை எண்ணி வந்து காத்திருந்தனர். துரியோதனாதியர் ‘பாண்டவர்களை எளிதாக வென்று விடலாம்’ -என்றெண்ணி வந்தனர். ஆனால் விளைவு நேர்மாறாக முடிந்து விட்டது. வந்த வேகத்தில் பெருந்தோல்வி அடைந்து திரும்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது துரியோதனாதியர்களுக்கு. பாண்டவர்களை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை விடத் தாங்கள் இவ்வளவு விரைவில் தோல்வி அடையும்படி நேர்ந்து விட்டதே என்ற வருத்தம் தான் அதிகமாக வாட்டியது அவர்களை

இந்த நிலையில் இவர்கள் படையெடுத்துச் சென்றதும் தோல்வியுற்று வந்ததுமாகிய நிகழ்ச்சிகள் திருதராட்டிரனுக்குத் தெரிந்தன. அவன் சிந்தித்தான். பாண்டவர்கள் அவனுக்குத் தம்பியின் புதல்வர்கள். அவர்களுக்கும் தன் மக்களுக்கும் இருக்கின்ற இந்தப் பகைமை, குரோதம் முதலிய உணர்ச்சிகளை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு விடுவார்களானால் அது நன்றாக இராது என்றஞ்சியது அவன் உள்ளம்: எனவே பாண்டவர்களின் வழியில் தன் மக்கள் அடிக்கடி குறுக்கிட்டு அவர்களைத் துன்புறுத்த முடியாத