பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

அறத்தின் குரல்

போர் செய்யும்போது உன் ஆண்மையைக் காண்பிக்க வேண்டும். வெறும் வாய் பேச்சுப் பேசிப் பயன் இல்லை. உன் வீரம் எத்தகையது? அர்ச்சுனனுடைய வீரம் எத்தகையது? இருவருடைய வீரத்தின் தராதரத்தையும் நான் நன்கு அறிவேன். நீங்கள் இருவரும் செய்யப் போகிற போரின் முடிவு தெரிந்த பிறகு உங்களில் யார் வீரர் என்பது தானாகவே தெரிந்து போகும்!’ - சல்லியனுடைய பேச்சு கர்ணனை மறைமுகமாகக் குத்திக் காட்டி அவமானப்படுத்தியது.

கர்ணன் வெகுண்டெழுந்தான். சல்லியனை அந்த விநாடியில் அங்கேயே கழுத்தை நெரித்துக் கொன்று விடத் துடித்தன அவன் கரங்கள். “சல்லியா! இந்த நட்ட நடுப் போர்க்களத்தில் இத்தனை வீரர்களுக்கும், படைத்தலைவர்களுக்கும் இடையே வேண்டுமென்றே என்னை நீ அவமானப்படுத்தி விட்டாய். உன் தகுதியை மீறி நீ பேசலாமா? சம்மதமானால் தேரை ஓட்டு! இல்லாவிட்டால் தேர்த்தட்டிலிருந்து கீழே இறங்கி உன் வழியைப் பார்த்துக் கொண்டு போ! என்னுடைய தகுதியைப் பற்றிப் பேச உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது?”

சல்லியனின் விழிகள் சிவந்தன. புருவங்கள் வளைந்து ஆத்திரம் கோடிட்டது. தேர்த்தட்டிலிருந்து கீழே குதித்து அவன் தன் இடையிலிருந்த வாளை உருவினான். கர்ணனுக்கு முன்னால் அவனை எதிர்த்துச் சல்லியனின் வாள் வேகமாச் சுழன்றது. “அடே! ஊர் பேர் தெரியாத கர்ணா! உனக்கு நான் எதற்காகத் தேரோட்ட வேண்டும்? நீ எலியை ஒத்தவன், இழிந்தவன். பூனை எங்கேயாவது எலிக்குப் பணிந்து நடக்குமா? உன்னால் முடியுமானால் என் வாளுக்குப் பதில் கூறு.” சல்லியனுடைய சொற்களால் சினங்கொண்ட கர்ணனும் தேரிலிருந்து கீழே குதித்து வாளை உருவி விட்டான், சல்லியனுக்கும், கர்ணனுக்கும் பயங்கரமான வாட்போர் நடக்கத் தொடங்கிற்று. தாங்கள் இருவரும் ஒரு தரப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்ற ஒற்றுமையுணர்வையும் மறந்து பகைவர்களெல்லோரும் கைகொட்டிச்