பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

251

என்னை அழைத்து என் நேரத்தை வீணாக்கிய உன்னையே திரும்பி வந்து கொன்று விடுவேன்” என்று கூறிவிட்டுச் சென்றது பூதம். பூதம் கிளம்புவதற்கு முன்பே பாண்டவர்கள் உயிரைக் காப்பதற்கு வேறு ஒரு தேவன் கிளம்பி விட்டான். அவனே எமன். எமதருமன், தருமனுக்குத் தந்தை அல்லவா? பாண்டவர்களுக்கு எதிராக துர்வேள்வி நடப்பதை அறிந்து அவர்களைக் காக்க உறுதி பூண்டு மண்ணுலகுக்கு வந்தான். கொல்லும் தொழிலுடையவன் காக்கப் புறப்பட்டால் அது எவ்வளவு பெரிய விந்தையாக இருக்க வேண்டும்! பாண்டவர்களை உயிர் பெற்று வாழச் செய்வதற்கென்றே நிகழ்ந்தவை போலச் சில நிகழ்ச்சிகள் அவர்கள் வசித்த காட்டில் நிகழ்ந்தன. அந்தக் காட்டில் வசித்து வந்த முனிவர் ஒருவருடைய புதல்வன் தான் அணிந்து கொள்வதற்காகப் பூணூலையும் மான் தோலையும் எடுத்து ஆசிரமத்திற்குள் வைத்திருந்தான். எங்கிருந்தோ நால்காற் பாய்ச்சலில் வேகமாக ஓடிவந்த மான் ஒன்று அவன் எடுத்து வைத்திருந்த மான் தோலையும், பூணுலையும் வாயில் கவ்விக் கொண்டு ஓடியது. பயந்து போன முனிவரின் புதல்வன் அங்கிருந்த பாண்டவர்களிடம் வந்து தன் மான் தோலையும் பூணூலையும் மானிடமிருந்து மீட்டுத் தருமாறு வேண்டிக் கொண்டான்.

மான் ஒருவரால் பிடிக்க முடியாத வேகத்தில் தலைதெறித்து விடுவது போல ஓடிக் கொண்டிருந்ததனால் பாண்டவர்கள் ஐந்து பேரும் ஒவ்வொருவராக அதைப் பின்பற்றித் துரத்திக் கொண்டு ஓடினார்கள். மான் அலுக்காமல் சலிக்காமல் வெகு தொலைவு ஓடியது. பாண்டவர்களும் விடாமல் பின்பற்றி ஓடினார்கள். ஓடஓடக் கால் நரம்புகள் விண் விண்ணென்று வலிக்கத் தொடங்கின. இறுதியில் மான் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. ஏமாற்றமும் உடற்சோர்வுமாகச் சகோதரர்கள் ஐவரும் களைத்துப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டார்கள். வாய் வறண்டு தாகம் எடுத்தது. உயிரே போய் விடுவது போலத் தாகம் தொண்டையைக் கசக்கிப் பிழிந்தது. ஐந்து பேரும் நீர்