பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

அறத்தின் குரல்


பிறப்பித்தான். வீரர்கள் சென்றனர். மயனுக்குத் திருப்தி ஏற்பட்டது. கட்டளையை மேற்கொண்டு சென்ற வீரர்கள் மிக விரைவிலேயே பொய்கையில் மறைந்திருந்த பொருள்களையெல்லாம் திரட்டிக் கொண்டு, வந்து சேர்ந்தனர். பொருள் வந்து சேர்ந்ததும் மயன் மண்டபம் கட்டுகின்ற வேலையைத் தொடங்கினான். அதிவேகமாக உயர்ந்த செளந்தரியங்களைச் சிருஷ்டிக்கும் திறன் படைத்த அந்தத் தெய்வீகக் கலைஞன் பதினான்கே நாட்களில் கண்ணைக் கவரும் அழகோடு மண்டபத்தைக் கட்டி முடித்து விட்டான். வீமனுக்கும் ஓர் கதாயுதத்தையும் அர்ச்சுனனுக்கு ஓர் வலம்புரிச் சங்கையும் மயன் தன் அன்பளிப்பாக அளித்தான். அவனுடைய நன்றி நிறைவேறி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் பாண்டவர்களை வணங்கி விடைபெற்றுச் சென்றான் அவன்.

மயன் இவ்வாறு மண்டபத்தை அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்ற சில நாட்களில் நாரத முனிவர் இந்திரப் பிரத்த நகரத்துக்கு விஜயம் செய்தார். பாண்டவர்கள் ஐவரும் அவரை வரவேற்றுப் புதிய மண்டபத்தைக் காண்பித்தனர். சிறந்த அமைப்பினாலும் உயர்ந்த பொருள்களாலும் ஈடு இணையற்று விளங்கிய அந்த மண்டபம் நாரதரைப் பெரிதும் கவர்ந்து விட்டது. பாண்டவர்களையும் மயனையும் பெரிதும் பாராட்டினார் அவர். “பாண்டவ சகோதரர்களே! இந்த நிகரற்ற மண்டபத்தைப் பெற்ற நீங்கள் இதைக் களனாகக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய காரியம் ஒன்று உண்டு. உங்களைக் கொண்டு ‘இராசசூயம்’ -என்ற பெருவேள்வியைச் செய்ய வேண்டும் என்று உங்கள் தந்தையாகிய பாண்டு பல நாளாகக் கருதியிருந்தான். ஆனால் தீவினை வசத்தால் அந்தக் கருத்து நிறைவேறுவதற்குள்ளேயே அவனுக்கு மரணம் நேரிட்டு விட்டது. இப்போது நீங்கள் அமரரான உங்கள் தந்தையின் அந்த வேண்டுகோளை நிறைவேற்றி விட வேண்டும். உங்கள் தந்தையின் ஆன்மா திருப்தியடையும் படியாக நீங்கள் இந்தக் கணத்திலிருந்தே