பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

அறத்தின் குரல்

அஞ்சுகிறவனில்லை, என்னோடு போர் செய்ய எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்த எதிரியையே நாடுவேன். தெரிந்து கொள். இன்னொன்று உங்கள் சூதாட்டத்திற்கு நான் சம்மதிக்கிறேன். வரச்சொல் சகுனியை! ஆடிப் பார்க்கிறோம். முடிவுகள், விதியிட்ட வழி ஏற்படட்டும். நான் தயார். உங்கள் பொறுமையையும், மிகக் குறைவான அறிவையும் இனி இதற்கு மேலும் நான் சோதிப்பதற்கு விரும்பவில்லை” -என்று தருமன் முடித்தான்.


6. மாயச் சூதினிலே!

‘சூதாடுவதற்குச் சம்மதம்’ என்று தருமன் கூறிய வார்த்தை அந்த அவையிலிருந்த பெரியோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்தது. வீட்டுமன், விதுரன் முதலிய முதியோர்களும் பிறரும் ‘இறுதி வரை தருமன் சூதாட்டத்திற்கு சம்மதிக்க மாட்டான்’ என்றே எண்ணியிருந்தனர். அவன் திடீரென்று அதற்குச் சம்மதித்தது கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். துரியோதனன் தருமனிடம் சூதாட்டத்துக்குரிய நிபந்தனைகளைக் கூறலானான். “இந்தச் சூதாட்டத்தில் உன் பங்குக்காக வைத்து ஆட வேண்டிய பந்தயப் பொருள்களை நீயே வைத்து ஆட வேண்டும். சகுனியின் பங்குக்குரிய பந்தயப் பொருள்களை நான் கொடுப்பேன்.”

“சரி, சம்மதம்” -தருமன் இதற்கு இணங்கினான்.

‘விதிக்கு முழு வெற்றி. தருமனுக்குப் படுதோல்வி. தருமனும் சகுனியும் சூதாடும் களத்தில் எதிரெதிரே ஆசனங்களில் அமர்ந்தனர், மாயச் சூது தொடங்கியது. காய்கள் உருண்டன். அழகிலும் ஒளியிலும், விலை மதிப்பிலும் தனக்கு இணையில்லாத முத்துமாலை ஒன்றைத் தருமன் பந்தயமாக வைத்தான். அதற்கு இணையான மற்றோர் மாலை சகுனியின் சார்பில் துரியோதனனால்