பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

அறத்தின் குரல்

போர்த் திறமையினால் அந்த ஏழுபேரையும் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். இதைக் கண்ட துரியோதனனுக்குப் பகீரென்றது.

‘இந்தச் சிவேதன் பெரிய வீரனாக இருப்பான் போலிருக்கிறதே! இவனை எதிர்க்க வேண்டுமானால் இவனை விட மீறிய கையாகத்தான் இருக்க வேண்டும்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டே அவன் படைத்தலைவனும் மிகப் பேரறிஞனுமாகிய வீட்டுமனை சிவேதனை எதிர்ப்பதற்கு அனுப்பினான். தன்னை அடக்குவதற்காகத் துரியோதனன் வீட்டுமனை அனுப்பியிருப்பதை அறிந்து கொண்ட சிவேதன், சல்லியன் முதலியவர்களை விரட்டித் துரத்துவதை நிறுத்திக் கொண்டு வீட்டுமன் முன் நின்று அவனை எதிர்த்தான். சிவேதனின் சிறிதும் கலக்கமில்லாத தீரம் வீட்டுமனையே அஞ்சிக் கலக்கம் கொள்ளும்படியாகச் செய்தது. எனினும் அவன் சமாளித்துக் கொண்டு சிவேதனோடு போர் செய்தான். சிவேதனுக்கும் வீட்டு மனுக்கும் நிகழ்ந்த போரில் வீட்டுமனின் தேர், தேர்க்கொடி எல்லாவற்றையும் சிவேதன் அறுத்துத் தள்ளிவிட்டான். வில் நாணையும் அறுத்து வீழ்த்தி வீட்டுமனை வெறுங்கையானாக்கி விட்டான். மகா வல்லமை வாய்ந்தவனான வீட்டுமன் திகைத்து விட்டான். சினங்கொண்ட துரியோதனன் களத்திலிருந்து வேறு பல அரசர்களைத் திரட்டி வீட்டுமனுக்குப் பக்கபலமாக சிவேதனை எதிர்க்க அனுப்பினான். சிவேதனை எதிர்க்க அவர்கள் ஓடி வந்தார்கள். வீட்டுமனும் புதிய வில் ஒன்றை எடுத்துக் கொண்டு எதிர்த்தான். சிறிது நேரம் போர் நடந்தது. இரண்டாம் முறையாக வீட்டுமனின் வில்லை ஒடித்து வீழ்த்தினான் சிவேதன். அம்முறை வீட்டுமனுடைய மனத்தில் வெட்கம் உறைத்தது. அவமானமாக இருந்தது அவனுக்கு.

“அடே! சிவேதா! உனக்கு வில்லைத் தவிர வேறு எந்த ஆயுதத்தை எடுத்தும் போர் செய்யத் தெரியாது போலிருக்கிறது? தெரியுமானால் வாளை எடுத்துப் போர்