பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

139

நகரத்தில் இராசசூய வேள்விக்குரிய ஏற்பாடுகளும் பூர்வாங்கமான நிகழ்ச்சிகளும் ஆரம்பமாயின.

2. சிசுபாலன் போட்டி

இராசசூய வேள்வி நிகழ்வதற்கு முன்னால் திக்கு விஜயம் செய்து முடிக்க வேண்டும் என்பது ஓர் மரபு, எல்லாத் திசைகளிலுமுள்ள எல்லா மன்னர்களையும் வென்று பணிவித்த தலைமையோடு அந்த வேள்வியைச் செய்தல் நலம். இதற்காகப் பாண்டவ சகோதரர்களும் திக்கு விஜயத்திற்குப் புறப்பட்டார்கள். வடதிசையை நோக்கி அர்ச்சுனனும் கிழக்குத் திசையை நோக்கி வீமனும் புறப்பட்டார்கள். தகுதி வாய்ந்த படைகளும் உடன் சென்றன. வடமேற்கு, தென்மேற்கு ஆகிய இவ்விரு திசைகளிலும் நகுலனும் தெற்குத் திசையில் சகாதேவனும் புறப்பட்டார்கள். சகோதரர்களை வாழ்த்தித் திக்கு விஜயத்திற்கு அனுப்பி விட்டுத் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றார் கண்ணாபிரான். கிழக்குத் திசையிற் சென்ற வீமன், கலிங்கம் முதலிய தேசங்களையெல்லாம் வென்று அந்தந்தத் தேசத்து அரசர்கள் கொடுத்த திறைப் பொருள்களை மலையெனக் குவித்தான். வடக்குத் திசையில் சென்ற அர்ச்சுனன் விந்தமலை, ஏமகூடமலை முதலிய மலைகளைக் கடந்து சென்று அதற்கு அப்பாலுள்ள நாடுகளையெல்லாம் வெற்றிக் கொண்டான். இவ்வாறே மற்றத் திசைகளில் சென்றவர்களும் அங்கங்கே பெரு வெற்றிகளை அடைந்தனர். வென்ற நாடுகளிலெல்லாம் அரசர்கள் மனமுவந்து காணிக்கையாகக் கொடுத்த பொருள்கள் மலைகள் மலைகளாகக் குவிந்திருந்தன. எல்லோரும் தாம் தாம் சென்ற திசைகளிலிருந்து இந்திரப் பிரத்த நகரத்துத் திரும்பி வந்தார்கள். இராசசூய வேள்விக்கு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

துவாரகையிலிருந்து கண்ணபிரானை அழைத்து வருவதற்காக நாரத முனிவர் சென்றார். வேள்வி நடக்கப்