பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

அறத்தின் குரல்

சிவபெருமானால் அளிக்கப்பட்ட மாபெரும் ஆற்றலமைந்த அந்த அஸ்திரம் மூன்று கோடி அசுரர்களையும் ஒரு நொடியில் சாம்பலாக்கியது. தோயமாபுரம் சூனியமாகியது. அங்கே வாழ்ந்து வந்த தீமையின் உருவங்கள் அழிந்து விண்ணகம் புகுந்துவிட்டன. வெற்றி வீரனாக அர்ச்சுனன் தேரில் வீற்றிருந்தான். மாதலிதேரை வானவர்கோ நகரமாகிய அமராபதியை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியால் விரைந்த அவர்கள் உள்ளங்களைப் போலவே தேர்ச்சக்கரங்களும் உருண்டன.

தேர் ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது இடை வழியில் அர்ச்சுனன் ஒரு விநோதமான காட்சியைக் கண்டான். அந்தரத்தில் மறைந்து நின்று தொங்குவதைப் போலத் தொலைவில் ஒளிமயமான நகரம் ஒன்று மேகங்களுக்கிடையே தென்பட்டது. அர்ச்சுனன் தேர்ப்பாகனை வினவினான். “மாதலீ! அதோ தெரியும் நகரத்தின் பெயர் என்ன? அந்த நகரத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா?”

“பிரபு! அந்த நகரம் காலகேயர்கள் வசிக்கும் நகரம், காலகை, பூலோமை என்ற பெயரினரான இரண்டு பெண்களுக்குச் சொந்தமானது. அதிரூபவதியான அந்தப் பெண்கள் பிரம்மாவை நோக்கித் தவம் செய்து சாகாவரமும் மற்றும் பல அரிய வரங்களும் பெற்றுள்ளார்கள். நகரத்திற்கு இரணிய நகரம் என்று பெயர். காலகை, பூலோமை இருவருக்கும் மக்கள் முறை உடையவர்களாகிய அறுபதினாயிரம் மாவீரர்கள் அங்கு வாழ்கின்றனர். அந்த நகரில் வாழ்கிறவர்களுடைய அழகிய தோற்றம், கண்டவர்களை வணங்குமாறு செய்யும் இயல்பை உடையது. சுடச்சுடச் சுடரும் செம்பொன் போன்ற மேனி நிறத்தை உடையவர்கள். உலகெங்கும் தங்கள் பெயரை நிலை நாட்டிய பெருமையுடையவர்கள். இன்று வரை யாருக்கும் போரில் தோற்காதவர்கள் தேவர்கள் கூடக் காலகேயர்களின் இரணிய நகரத்துப் பக்கம் போவதற்கு அஞ்சுவார்கள்.“ என்று மாதலி விவரங்களைக் கூறினான்.