பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

345

பிறரிடம் உதவி கேட்கும் போது பணிவாகக் கேட்க வேண்டியதுதான் முறை! துரியோதனன் அனுப்பியிருந்த திருமுகங்களோ ‘வேலைக்காரனை மிரட்டிக் கட்டளையிடுவது’ போன்ற ஆணவமும் அதிகாரமும் பொருந்திய வாசகங்களால் நிறைந்திருந்தன. அவன் திருமுகங்களைப் படித்த எவருக்கும் அவற்றில் இருக்கும் ஆணவத்தைக் கண்டு ஆத்திரம் உண்டாகுமே அன்றி உதவி புரிய வேண்டும் என்ற நல்ல விருப்பம் உண்டாகாது. ஆனாலும் என்ன துரியோதனனைப் போலவே ஆணவக்கார அரசர்கள் சிலர் உலகில் இல்லாமலா போய்விட்டார்கள்? அவர்கள் அவன் கட்டளையைச் சிரமேற்கொண்டு உதவிப் படைகளோடு புறப்பட்டு வந்தனர். துரியோதனனுடைய ஆணவத்தை எதிர்த்து நிற்க ஆற்றலில்லாத சிற்றரசர்களும் படை திரட்டிக் கொண்டு வந்தனர். வலிமையும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ள பேரரசர்கள் அதிகமாக அவன் பக்கம் சேரவே இல்லை. இந்த நிலையில் வழக்கம் போலச் சூழ்ச்சியில் இறங்கியது துரியோதனனுடைய மனம், அந்த மனத்தின் இயல்பே அதுதானே?

மத்திரபதி மன்னன் என்று ஓர் பேரரசன்; அவன் பாண்டவர்களுக்கு மாமன் முறையுடையவன். போரில் பாண்டவர்களுக்கே உதவிபுரியவேண்டும் என்ற நோக்கத்தோடு தன் படைகளுடன் புறப்பட்டிருந்தான். துரதிர்ஷ்டவசமாக அவன் வருகிற வழி துரியோதனன் நாட்டைக் கடந்து பாண்டவர்கள் இருப்பிடம் சேர வேண்டியதாக அமைந்திருந்தது. ஏதாவது சூழ்ச்சி செய்து அவனை நடுவழியிலேயே மறித்துத் தன்பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டான் துரியோதனன். திட்டத்திற்கேற்ப ஒரு சதியும் செய்தான். மத்திரபதியின் படைகள் வருகிற வழியில் அப்படைகளுக்குச் சோறும் நீரும் கொடுத்து உதவும் அறச்சாலைகள் பலவற்றை ஏற்படுத்தினான். துரியோதனன் தன்னுடைய இந்த ஏற்பாடுகளைப் பாண்டவர்கள் செய்திருப்பதைப் போலத்