பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

520

அறத்தின் குரல்

என்னால் தேர் ஓட்டியாக இருக்கமுடியாது. நீயும் முட்டாள், உன்னால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பியிருக்கிறானே துரியோதனன்; அவனும் முட்டாள்” என்று கூப்பாடு போட்டு விட்டு கர்ணனுடைய தேரிலிருந்து கீழே இறங்கித் தனது தேரில் தனியே போய் ஏறிக்கொண்டான் சல்லியன். கர்ணனால் அவனைத் தடுத்து நிறுத்தவோ, சமாதானப்படுத்தவோ முடியவில்லை.

‘சரிதான்! முன்பு பரசுராமன் நமக்கு ஒரு சாபம் கொடுத்திருக்கிறான். ‘நீ படித்த யுத்த தந்திரங்களும், பிற கலைகளும் பயன்பட வேண்டிய சமயத்தில் பயன் படாமல் உனக்கு மறந்து போகட்டும்’ என்று அவன் அளித்த சாபம் இப்போது பலிக்கும் நேரம் நெருங்கி விட்டது போலிருக்கிறது. அதனால்தான் இத்தனை தோல்விகளையும், துன்பங்களையும், எனக்கு நானாகவே தேடிக் கொள்கிறேன்’ என்று கர்ணன் இவ்வாறு தன் மனத்திற்குள் சிந்தித்துக் கொண்டான்.

சல்லியன் பிரிந்து சென்ற பிறகு கர்ணனுக்கு வேறு தேரோட்டி கிடைக்கவில்லை. தேர்ப்பாகன் இல்லாத சாதாரணத் தேர் ஒன்றில் ஏறிக்கொண்டு சென்று அவன் அர்ச்சுனனோடு போர் செய்தான். கர்ணனை எப்படியேனும் கொன்று தீர்த்துவிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த அர்ச்சுனன் அதுதான் சமயமென்று அவனை வளைத்துக்கொண்டு கடும் போரில் இறங்கினான். போதாத காலம் நெருங்கி விட்டதோ, அல்லது பரசுராமருடைய சாபம் பலிக்கும் வேளையோ கர்ணனுடைய தைரியமும், வீரமும் விநாடிக்கு விநாடி நலிந்து கொண்டேயிருந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகள் கர்ணனுடைய இடையெங்கும் பாய்ந்து குருதியொழுகச் செய்து கொண்டிருந்தன. கர்ணனுடைய இதயமே அடங்கி ஒடுங்கி உயிர்ப் பிரிவுக்குத் தயாராகிவிட்டது போலிருந்தது. ஆனாலும் அந்த மனவேதனையைப் பொறுத்துக் கொண்டே அர்ச்சுனன் மேல் அம்புகளைப் பொழிந்து கொண்டிருந்தான் அவன்.