பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

அறத்தின் குரல்

பிழைத்து விட்டான். அவன் மகன் இருப்பது தான் உனக்கே தெரியும். உன்னுடைய முயற்சியால் காண்டவ வனத்தை அக்னியிடமிருந்தோ, அர்ச்சுனனிடமிருந்தோ காப்பாற்றி விட முடியாது. உன் வீரத்திற்குக் கண்ணபிரானும் அர்ச்சுனனும் சிறிதும் இளைத்தவர்களில்லை. ஆகவே, போரை உடனே நிறுத்திவிட்டு அமராபதிக்குத் திரும்பிச் செல்” -என்று ஓர் தெய்வீகக் குரல் எழுந்தது. அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்ட இந்திரன் போரை நிறுத்திவிட்டு தன் நகருக்குத் திரும்பிச் சென்றான். இந்திரன் போரை நிறுத்தி விட்டுப் பின் வாங்கி விடவே அர்ச்சுனன் வெற்றி வாகை சூடினான்.

வெற்றிக்கு அறிகுறியாகத் திக்குத் திகாந்தங்களெல்லாம் அதிரும்படி சங்கநாதம் செய்தான். தனியொருவனாக நின்று வென்ற அவன் சிறப்பையாவரும் புகழ்ந்து பாராட்டினார்கள். காண்டவம் தீப்பற்றி எரியும் போது கண்ணபிரானுடைய சம்மதத்தாலும் தன் கருணையினாலும் சிலரை உயிர் தப்பிச் செல்லுமாறு விட்டிருந்தான் அர்ச்சுனன். அவர்களில் ‘மயன்’ என்னும் தேவதச்சனும் ஒருவன், “பாண்டவர்கள் எந்த நேரம் எத்தகைய உதவியை விரும்பினாலும் செய்யக் காத்திருப்பேன்” என்று நன்றிப் பெருக்கோடு கூறி அர்ச்சுனனிடமும் கண்ணபிரானிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்றான் அவன் மயனைப் போலவே தட்சகன் மகனும் சில குருவிகளும் தீக்கிரையாகாமல் தப்பிப் பிழைத்தன. கனற்கடவுளுக்குத் தான் கொடுத்த உறுதிமொழியின்படியே காண்டவம் முழுவதையுமே விருந்தாக அளிக்க முடிந்ததே என்பதற்காகத் திருப்திப்பட்டான் அர்ச்சுனன். பலகாத தூரம் விரிந்து பரந்து கிடந்த அந்த மாபெரும் கானகத்தை உண்டு கொழுத்த வலிமையோடு கனற்கடவுள் அர்ச்சுனனுக்கும் கண்ண பிரானுக்கும் முன்னால் வந்து நின்றார்.

“இப்போது திருப்தி தானே?” என்றார் கண்ணபிரான் நகைத்துக் கொண்டே. “திருப்தி மட்டுமா? மட்டற்ற மகிழ்ச்சியும் கூட கைம்மாறு செய்ய முடியாத பேறுதவியை