பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

141

கொடுப்பது போலச் சுடர் பரப்பியது. ஏழு நாட்கள் கண்ணும் கருத்துமாக வேள்வியை நிகழ்த்தி நிறைவேற்றினார்கள்; அந்தப் புண்ணியத் திருச்செயல் முற்றியதும் தருமனும் திரெளபதியும் தான தர்மங்களைச் செய்தனர். வந்திருந்த அந்தணர்களுக்கும் மறையவர்களுக்கும் புலவர் பெரு மக்களுக்கும் அவரவர்கள் விரும்பிய பரிசில்களை மனமுவந்து அளித்தனர். விருந்தினர்கள் சிறப்பான முறையில் உபசரித்து அனுப்பப் பெற்றார்கள். வேள்வி முற்றிப் பூரணமடைந்ததும் வேள்வியைச் செய்தவர்கள் தக்க பெரியார் ஒருவருக்கு வழிபாடு செய்வது வழக்கம். அப்போது அங்கே இந்திரப் பிரத்த நகரத்து வேள்விச் சாலையில் பல பெரியோர்கள் கூடியிருந்ததனால் யாருக்கு முதல் வழிபாடு செய்வது என்று தருமனுக்குப் புரியவில்லை. அதனால் அவன் வீட்டுமனிடம் யோசனை கேட்கக் கருதினான். வீட்டுமனிடம் கேட்டான்.

வீட்டுமன் அங்கிருந்தவர்கள் யாவருக்கும் மூத்த வராயினும் அறிவிலே சிறந்த வியாச முனிவரை நோக்கி, “வழிபாட்டில் யாருக்கு முதன்மை கொடுக்கலாம்?” என்று கேட்டார். வியாச முனிவர் ‘அங்குள்ளோரில் முதல் வழிபாட்டைப் பெறத் தகுந்தவர் கண்ணபிரான் ஒருவரே’ -என்று கூறினார். வீட்டுமன் இணங்கினார். தருமனும் கண்ணனுக்கே முதல் வழிபாடு செய்ய உடன்பட்டான். அவ்வளவேன்? வேள்விக் கூடத்தில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கண்ணபிரானையே வழிபாட்டுக்குரியவராகக் கொள்ள வேண்டுமென்பதில் கருத்து மாறுபாடின்றி மகிழ்ந்திருந்தார்கள். அங்கிருந்தவர்களில் ஒரே ஒருவனுடைய உள்ளம் மட்டும் பொறாமையால் குமுறிக் கொண்டிருந்தது. கண்ணபிரான் முதல் வழிபாடு பெறுகிறாரே என்ற நினைவால் நெஞ்சம் குமுறிக் குரோதம் கொண்டிருந்தான் அந்த உள்ளத்துக்குரியவன். அவன் தான் சேதி நாட்டு மன்னன் சிசுபாலன். தன்னைப் பற்றித் தானே பெருமையாக நினைத்துக் கொள்ளும் இயல்பு வாய்ந்தவன்.